Mi-Voice MIC News

மக்களின் சமூக நலனுக்கு முன்னுரிமை அளியுங்கள்! – மஇகா தலைவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

[ஐ.எஸ்.சத்தியசீலன்]

கோத்தா ராஜா, ஏப்.6-

கண்ணுக்குத் தெரியாத கொடூர கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நிசப்த போரில் நாடே மூழ்கியிருக்கும் நிலையில், மக்களின் சமூக நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதில் மஇகா தலைவர்கள் முன்னுரிமை செலுத்த வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால், தங்களின் அன்றாட வருமானத்தையும் அடிப்படை வாழ்வாதாரத்தையும் இழந்து நலிவுற்றிருக்கும் மக்களின் துயர் துடைப்பதற்கான செயல்நடவடிக்கைகளில் மஇகா முழு ஈடுபாடு காட்டி வருவதையும் அவர் கோடிகாட்டினார்.

முன்னதாக, மஇகாவின் உயர்மட்ட தலைவர்களுடனான களச் சந்திப்பை தவிர்த்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், நேற்று மாலை வேளையில் இணைய ஒளித்தோற்ற அழைப்பின் வழி அனைத்து தலைவர்களிடமும் ஒருசேர கலந்துரையாடல் நடத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்த நிசப்த போராட்டத்தினால், யாரும் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் இன்றி அல்லலுறக்கூடாது என்பதே மஇகாவின் முழுமுதற் நோக்கம். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தலைவர்களும் தத்தம் பகுதிகளிலுள்ள மக்களின் சமூக நலன் தொடர்ந்து பேணிக்காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

யாரும் எக்காரணம் கொண்டும் சமூகநல உதவியிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மஇகா தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொண்டார்.

http://malainaadu.com.my/no-one-shall-be-left-behind-tan-sri-vigneswaran-told-mic-leaders