MIC News

2020ஆம் புத்தாண்டில் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் பெறுவோம்” – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் – 2020ஆம் ஆண்டின் தொடக்க நாள் – புத்தாண்டு நாள். புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த இனிய நாளில், மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும். இந்த நியதியை முன்வைத்துத்தான் இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கும் மஇகா, ஒட்டுமொத்த இந்தியர்களின் உரிமைக்காக அனைத்து நிலைகளிலும் போராடி வருகிறது. குறிப்பாக, இந்தியர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மஇகா தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், மஇகாவில் இருக்கின்ற பல்வேறு திட்டங்களின் வழி அதனை செயல்படுத்தியும் வருகிறது. மேலும், வளமும் – வலிமையும் மிக்க சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற நோக்கத்தில் மஇகா முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்றும் மஇகா தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“இன்றையச் சூழ்நிலையில் இந்தியர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இவற்றினை எல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால், நம்மிடையே ஒற்றுமை மிகவும் அவசியம். ஒன்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே, அதனால் விளைகின்ற நன்மைகளை நாமனைவருமே அடைய முடியும் என்பதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்தியர்கள் என்று சொல்லும்போது. நம்மிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் – தோன்றலாம். ஆனால். ஒரு சவாலை எதிர்நோக்கும் காலத்தில், ஒரு போராட்டச் சூழ்நிலை ஏற்படக்கூடிய காலக் கட்டத்தில். அந்தச் சவாலை முறியடிக்கும் வகையில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். எனவே, பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் புதிய பயணத்தை தொடங்கும் வகையில், இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் இருந்து சாவல்களை எதிர்கொண்டு வெற்றிப் பெறுவோம்” என்றும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் புதிய எழுச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்துவதாகவும், இந்தியர்கள் அனைவரும் புத்தாண்டினை புத்துணர்வோடு கொண்டாட வேண்டுமென்றும் விக்னேஸ்வரன்  பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

About the author

TheVoice

Add Comment

Click here to post a comment