ஜொகூர்பாரு:
இந்திய சமுதாயம் வருமானத்திலிருந்து சொத்துடைமை நோக்கி முன்னேற வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
மலேசிய இந்தியச் சமூகத்தின் பொருளாதார உரிமை, சொத்துடைமை உயர்வு என்பது நீண்டகாலக் கோரிக்கையாகும்.
1974ஆம் ஆண்டு மே மாதம் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் நடத்திய இந்தியப் பொருளாதார மாநாட்டின் மூலம் உருவான ‘நீலப் புத்தகம்’ பொருளாதாரப் பங்குடைமை, கல்வி, திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகளை வலியுறுத்தியது.
ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் இந்தியர்களின் பொருளாதாரப் பங்குடைமையை 3 விழுக்காடாக உயர்த்தும் இலக்கு இன்னும் நிறைவேறவில்லை.
இதற்காக மஇகா இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ்:
இந்தியச் சமூகத்திற்காக கூடுதலாக 1.5 பில்லியன் AS1M முதலீட்டு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எம்40, தி20 குடும்பங்கள் தலா 30,000 பங்குகள் வரை முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
பி40 இந்தியக் குடும்பங்கள் 100,000 பேருக்கு, வட்டியில்லாக் கடன் மூலம் தலா 5,000 ரிங்கிட் வழங்கும் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது.
இதனால் பயன்பெற வேண்டிய சுமார் 80,000 குடும்பங்கள் இன்னும் அந்த வாய்ப்பைப் பெறவில்லை.
எனவே, AS1M திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவும், பிரதமரின் ஆதரவைப் பெறவும் மஇகா கோரிக்கை விடுக்கிறது.
மேலும் இந்தியச் சமூகத்தின் சொத்துகள், பங்குடைமை நிலவரம் குறித்து பொருளாதார அமைச்சு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதனுடன் தொழில்முனைவோருக்குப் பயிற்சி. வணிகக் கடன்களுக்கான வாய்ப்புகள். சிறு வணிகங்களை வளர்த்தல். நிறுவனங்களுக்கான விநியோக வாய்ப்புகள். வீட்டு உரிமை, சொத்துச் சேர்ப்பு போன்ற அம்சங்களைக் கொண்ட நீண்டகாலச் செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்தியச் சமூகம் வெறும் வருமானத்தை நம்பி வாழும் நிலையிலிருந்து சொத்துகளை உடைய சமூகமாக மாற வேண்டும் என்பதே மஇகாவின் இந்தப் பொருளாதாரக் கோரிக்கையின் அடிப்படை நோக்கமாகும்.
பொருளாதாரப் பாதுகாப்பிலிருந்து சொத்துடைமை நோக்கி; வாழ்வாதாரப் போராட்டத்திலிருந்து பொருளாதாரப் பங்களிப்பு நோக்கி; வளர்ச்சியின் நுகர்வோராக மட்டுமல்லாமல், வளர்ச்சியின் உரிமையாளர்களாகவும் இந்தியர்கள் உயர வேண்டும் என்று அவர் கூறினார்.





