Mi-Voice MIC News

பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களுக்கு வருமானம் பயன்படுத்தப்படும்

ஈப்போ : பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வருமானம் பயன்படுத்தப்படும் என டத்தோ வி.இளங்கோ விளக்கமளித்துள்ளார்.

பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பேராக் மாநில இந்தியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் “கல்வித் தோட்டம்” குறித்து அண்மைய சில நாட்களாக தமிழ் ஊடகங்களில் பலவிதமான கோணங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) பத்திரிகையாளர்களுக்கு அளித்த விளக்கத்தில் பேராக் மாநில மஇகா தலைவரும், பேராக் மாநில மந்திரி பெசாரின் இந்திய சமூகத்திற்கான சிறப்புச் செயலாளருமான டத்தோ வி.இளங்கோ விரிவான விவரங்களை எடுத்துரைத்தார்.

2009-ஆம் ஆண்டில் பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ சாம்ரி அப்துல் காதிர் மஇகாவின் பரிந்துரைகள், முயற்சிகள் காரணமாக பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வழங்கினார்.

பேராக் மாநில இந்திய சமூகத்தினர் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட டத்தோஸ்ரீ சாம்ரி அந்த நோக்கத்திற்காகவே இந்த நிலத்தை இந்திய சமூகத்திற்கென ஒதுக்கீடு செய்தார் என்றும் இளங்கோ விளக்கினார்.

அப்போதைய பேராக் மாநில மஇகா தலைவராக இருந்த டான்ஸ்ரீ வீரசிங்கமும், மற்ற மஇகா பொறுப்பாளர்களும் இந்தத் திட்டத்திற்காக பலவிதங்களிலும் பாடுபட்டனர்.

இந்த நிலத்தை முறையாக நிர்வகிக்க அறவாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த அறவாரியத்தின் தலைவராக பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரான முனியாண்டி பணியாற்றி வருகிறார்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் வழங்கிய கடன், நிலத்தை மேம்படுத்த அவர்கள் புரிந்த உதவிகள், ஆகியவற்றின் பலனாக தற்போது கல்வித் தோட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக உருவாகி வருமானத்தையும் ஈட்டத் தொடங்கியிருக்கிறது.

இந்த வருமானம் முழுவதும் பேராக் மாநில ஏழை இந்தியர்களின் கல்வி நலன்களுக்காக மட்டுமே வழங்கப்படும் என்றும் இளங்கோ உறுதியளித்தார்.

இதே விளக்கக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வித்தோட்ட அறவாரியத்தின் தலைவர் முனியாண்டி “இந்த நிலத்தைப் பெற பேராக் மஇகாதான் எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டது. அதற்கேற்பவே இந்த நிலமும் வழங்கப்பட்டது. எனினும் இன்று கல்வித் தோட்டம் வெற்றிகரமாக உருவாகியிருப்பதற்கு பேராக் மாநில மஇகா, கல்வித்தோட்ட அறவாரியம், நிலத்துக்கு கடன் அளித்து மேம்படுத்திய தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் ஆகிய 3 அமைப்புகளுமே முக்கியமானக் காரணங்களாகும்” என்று கூறினார்.

இந்தத் திட்டம் எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புக்கும் உரிமையானதல்ல, மாறாக பேராக் மாநில இந்திய சமூகத்தின் சொத்து என்று கூறிய முனியாண்டி இந்த நிலத்தின் அதிகாரபூர்வ உரிமையாளர் “Yayasan Pembangunan Pendidikan India Negeri Perak” எனவும் உறுதிப்படுத்தினார்.

ஒருசிலர் கூறி வருவதைப் போல் இந்த நிலத்தை ஒரு கட்சியோ, தனிநபர்களோ, அமைப்புகளோ கைப்பற்றிக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு கூறப்படுவது பொய்த்தகவல்கள் என்றும் முனியாண்டி மேலும் தெரிவித்தார்.

https://selliyal.com/archives/235418