Mi-Voice MIC News

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் கட்சியும் சமுதாயமும் புறக்கணிக்கப்படுகின்றன, ம.இ.கா அதிருப்தி

கோலாலும்பூர், மே 6: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் அமைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்புதிய ஆட்சியின் கீழ் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே அமைகின்றது என ம.இ.காவின் தேசிய தகவல் அதிகாரி வே. குணாளன் கூறியுள்ளார்.

“நாடு தற்போது கோவிட்-19 தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், அரசியல் குழப்பங்களும் உட்பூசல்களும் முக்கியத்துவம் பெறவில்லை. புதிய ஆட்சி அமைய ம.இ.கா முழு ஆதரவினை வழங்கியுள்ள போதிலும், அமைச்சரவையில் ஒரே ஒரு முழு அமைச்சர் வழங்கப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது, கட்சியின் ஆதரவினை சிறுமைப்படுத்துவதாக உள்ளது.”

“கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சமுதாயத்தின் அரசியல் இயக்கமாகவும், குரலாகவும் உள்ள ம.இ.காவே இந்த அரசின் கீழ் புறக்கணிக்கப்படுள்ள நிலையில், இந்திய சமுதாயத்தின் நலனும், எதிர்காலமும் கூட கேள்விக்குறியாகியுள்ளது,” என வே. குணாளன் வேதனையுடன் குறிப்பிட்டார்.

“கட்சிக்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பொறுப்பினை மட்டும் ஒதுக்கிவிட்டு, துணையமைச்சர், செனட்டர், அரசு சார் நிறுவனங்களின் இயக்குனர் வாரியம் போன்ற பிற பொறுப்புகளை வழங்காமல் இந்த அரசாங்கம் மெத்தனம் காட்டுகின்றது. இது பதவி மோகம் அல்ல, மாறாக கட்சிக்கும் இந்திய சமுதாயத்திற்கும் வழங்கப்பட வேண்டிய உரிமை, அங்கீகாரமாகும்!”

“இந்திய சமுதாயம் இந்த பாகுப்பாட்டினை உணர்ந்து கேள்வி எழுப்பினாலும், எங்களிடம் அதற்கான பதில் இல்லை என்பதுதான் உண்மை. உட்பூசல்களும், குழப்பங்களும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தினை சூழ்ந்துள்ள வேளையில், இந்த அரசின் தலைமைத்துவமும் செயல்பாடுகளும் அதிருப்தி அளிக்கின்றன,” என வே. குணாளன் மேலும் தெரிவித்தார்.

“கோவிட்-19 நோய்ப்பரவலின் காரணமாக இந்தியா, நேப்பாள், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சிக்கியுருந்த 3500-கும் அதிகமான மலேசியர்கள் மீண்டும் நாடு திரும்ப ம.இ.கா நடவடிக்கைகளில் இறங்கியப்போதும், இந்த அரசாங்கம் எவ்வித நிதியுதவியையும் வழங்கவில்லை. நாடு முழுமையும் உள்ள ம.இ.கா பொறுப்பாளர்கள் பாதிக்கப்படுள்ள மக்களுக்கு தங்களின் சொந்த முயற்சிகள் வாயிலாகத்தான் கோவிட்-19 உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்திய சமுதாயத்திற்கென இந்த அரசாங்கம் எதையும் இதுவரை வழங்கவுமில்லை, சமுதாய நலன், எதிர்காலம் குறித்த எந்த திட்டத்தையும் கொண்டிருக்கவுமில்லை!”.

இச்சூழ்நிலையில், ம.இ.கா தொடர்ந்து கட்சியையும், உறுப்பினர்களையும் வலுப்படுத்தி, சமுதாய நலன் பேணப்படுவதை உறுதி செய்ய போராடும் என வே. குணாளன் கூறினார்.

“பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் ம.இ.கா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் வேளையில், எதிர்வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இதுக்குறித்து விவாதிக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின்பால் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசாங்கத்தை நாம் தொடர்ந்து ஆதரிக்கத்தான் வேண்டுமா என்பதனை முடிவெடுக்க வேண்டும்,” என வே. குணாளன் சூளுரைத்தார்.

https://www.thesentral.my/2020/05/06/tamil-mic-dissapointed-with-pn/

About the author

Editor

Add Comment

Click here to post a comment