MIC News

தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிரான வழக்கில் ஒரு தரப்பாக இணைய ம.இ.கா நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோலாலம்பூர், ஜன.16- இந்நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் சட்டவிரோதமானது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் ம.இ.கா ஒரு தரப்பாக இணையும் மனுவை நீதிமன்றத்தில் சார்வு செய்துள்ளது.

இந்நாட்டில் இருக்கும் தமிழ், சீனப்பள்ளிகள் சட்டத்திற்கு விரோதமான என்று கூறி வழக்குத் தொடுத்திருக்கும் தீபகற்ப மலாய் மாணவர்கள் கூட்டமைப்பு (ஜிபிஎம்எஸ்) மற்றும் மலேசிய இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் (எம்ஏபிபிஐஎம்) தொடர்பான வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும்படி ம.இ.கா கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு மனு சார்வு செய்துள்ளது.

இந்நாட்டில் இருக்கும் தமிழ், சீனப்பள்ளிகள் செக்‌ஷன் 28 மற்றும் 17, கல்வி சட்டம் 1996, 152 கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் முறையாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ம.இ.கா மத்திய செயலவை அங்கீகாரத்துடன் ம.இ.கா தலைமைச் செயலாளர் டத்தோ எம.அசோஜன் இந்த மனுவை சார்வு செய்துள்ளதாக ம.இ.கா கல்வி குழுத் தலைவர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

அந்த மனுவில் ம.இ.காவும் ஏன் ஒரு ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 1946இல் தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து ம.இ.கா அதன் பாதுகாவலராக இருந்து வருகிறது என்றும் கல்வி சட்டம் 1966இன் கீழ் மலேசிய இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் ம.இ.கா அவர்களின் உரிமையை காப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு ம.இ.கா உறுப்பினர்களின் உரிமைகளை நேரடியாக பாதிப்பதுடன் சுதந்திர காலம் தொட்டே தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ம.இ.கா பாடுபட்டு வந்துள்ளதால் இந்த வழக்கில் ஒரு தரப்பாக நுழைவது ம.இ.காவின் கடமையாகும் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ கமலநாதன் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் தமிழ்ப்பள்ளியை பாதுகாக்க வேண்டியது ம.இ.காவின் கடமையாகும் என்பதால் நீதிமன்றம் இந்த வழக்கில் ம.இ.காவை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும் என்று நம்புவதாக டத்தோ கமலநாதன் தெரிவித்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை பிப்ரவரி 18இல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

TheVoice

Add Comment

Click here to post a comment