நாடாளுமன்றத்தில், நாட்டில் நடைமுறையில் உள்ள ஷாரியா குற்றவியல் சட்டம் (1965) அல்லது (Syariah Courts Criminal Jurisdiction Act)1965 மீதான, திருத்தம் செய்யும் நோக்கத்தில் ஒரு புதிய மசோதா சமர்ப்பிக்கப்பட்டது. இம்மசோதா RUU 355 என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற 13-வது தொடரில் மாரான் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஸ் கட்சியின் தேசியத் தலைவருமாகிய துவான் ஹாஜி ஹடி அவாங் இம்மசோதாவை கடந்த 18 மார்ச், 2015ஆம் ஆண்டு சமர்ப்பித்தார். இம்மசோதா நாடாளுமன்ற கூட்ட நிகழ்ச்சி நிரலில் எட்டுமுறை காணப்பட்டாலும், இதுவரை இது சம்பந்தமாக எந்தவித விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.
மலேசிய அரசியல் சாசனத்தில் (Federal Constitution) ஒன்பதாவது அட்டவணையில் (Nineth Schedule) மத்திய அரசாங்கத்தின், பார்வையில் உள்ள விஷயங்களை பட்டியல் I (List I Federal) என்றும், மாநில அரசாங்க பார்வையில் உள்ள விஷயங்களை பட்டியல் II (List II – State) என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், இது சம்பந்தமான சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் ஷரத்து 74-லிலும், மாநில சட்டமன்றத்திற்கு 77-லிலும் உரிமை வழங்கியிருக்கிறது.
இதன் அடிப்படையில், பட்டியல் II-ல் காணப்படும் இஸ்லாம் மதம் மையமாகக் கொண்ட குற்றச் செயல்களை விசாரித்து மாநில அரசாங்கத்தின் பார்வையில் உள்ள ஷாரிய நீதிமன்றங்கள் தண்டனை வழங்க, மேற்கூறிய ஷாரியா குற்றவியல் சட்டம் 1965-இல் இயற்றப்பட்டது. இச்சட்டம் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக 1984ஆம் ஆண்டு, ஷாரிய நீதிமன்றங்கள் ஆறுமாத தண்டனையை, மூன்று ஆண்டுகளுக்கும், ஆயிரம் ரிங்கிட் அபராதம் ஐந்தாயிரம் ரிங்கிட்கும், அதோடு ஆறு பிரம்படி வழங்கும் அதிகாரத்தையும் வழங்கியது. இச்சட்டம் இஸ்லாம் மதத்தை தழுவியவர்களிடையே மட்டுமே அமல்படுத்தப்படும் என அரசியல் சாசனம் தெளிவாக கூறுகிறது.
இதற்கிடையில், மேற்கூறிய சட்டத்தினை மேலும் திருத்தம் செய்ய வேண்டும் என கடந்த 2016 நவம்பர் 24-ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற அவையில் ஹாஜி ஹடி கேட்டுக் கொண்டார். இந்த சட்டத்தில், ஷாரிய நீதிமன்றங்களுக்கு மேலும் கூடுதல் தண்டனைகள் வழங்க அதிகாரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குறிப்பாக, ஷாரிய நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகள் சிவில் நீதிமன்றங்களுக்கு ஈடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த RUU355 திருத்த மசோதாவை சமர்ப்பித்தார். அதாவது, தற்சமயம் ஷாரிய நீதிமன்றங்கள் வழங்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையை முப்பது ஆண்டுகளாகவும், RM 5000 அபராதத்தை RM 1,00,000 ஆகவும், அதோடு ஆறு பிரம்படியை 100 பிரம்படியாக உயர்த்த அதிகாரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால், இம்மசோதா எட்டுமுறை கூட்ட அறிக்கையில் காணப்பட்டாலும் விவாதத்திற்கு வராமலேயே கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரோடு ஒத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த புதிய சட்டத்திருத்த மசோதா ஹுடுட் (Hudud) சட்டத்தை அறிமுகப்படுத்தும், உள்நோக்கம் கொண்டதாகவும் அதுவும் இஸ்லாம் அல்லாதவர்களை பாதிக்கும் என்ற ஒரு அபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகிறது, இதனால், இச்சட்ட திருத்த மசோதா இஸ்லாம் அல்லாதவர்களிடையே ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உருவாகி வருகிறது.
அரசியல் சாசனம் 74-வது ஷரத்து இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து, தேவைப்பட்டால் அதற்காக சட்டங்களையும் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், நாடாளுமன்றம் கொண்டுவரும் புதியச் சட்டங்கள், அரசியலமைப்பில் காணப்படும் ஷரத்துக்கு, குறிப்பாக 3(1)க்கு புறம்பாக இருக்ககூடாது. அதாவது, இந்நாட்டின் அதிகார சமயம் இஸ்லாம் மதம். எனினும், இதர சமயங்கள் சுதந்திரமாக சட்டத்திற்கு உட்பட்டு அமல்படுத்தலாம் என தெளிவாகக் கூறுகிறது. இந்நாட்டில் அரசியல் சாசனம்தான் நாட்டின் தலைமை சட்டம் என்பதை நாம் உணர வேண்டும்.
இதற்கிடையே, ஹுடுட் சட்டம் 1993-ஆம் ஆண்டு கிளந்தான் மாநில சட்டமன்றத்திலும், 2002-ஆம் ஆண்டு திரெங்கானு மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இச்சட்டம் இம்மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சமயத்தை தழுவியவர்களிடையே மட்டும்தான் அமல்படுத்தப்படும் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டது. இஸ்லாம் அல்லாதவர்களிடையே இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என பலமுறை அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை இச்சட்டம் பல்வேறு இதர காரணங்களுக்காக நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.
இந்திரா காந்தியின் பெடரல் நீதிமன்ற தீர்ப்பு இந்நாட்டில் கட்டாய மதமாற்றத்திற்கு ஒரு வெளிச்சம் தந்தது. அதாவது, கடந்த 1988-ஆம் ஆண்டு 121-ஆவது ஷரத்துடன் (1A) ஷரத்து இணைத்துக்கொண்டதன் வழி சிவில் நீதிமன்றம் மதமாற்ற விவகாரங்களில், குறிப்பாக கட்டாய மதமாற்றும் இலாக்காக்களின் தன்மூப்பான நடவடிக்கைகளில் தலையிட்டு நீதிபரிபாலனம் செய்ய முடியும் என்ற உண்மை வெளிப்பட்டது.
எது எப்படி இருப்பினும், நாட்டில் நடக்கும் கட்டாய மதமாற்றத்திற்கும் RUU355-க்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதை இந்த நாட்டு இஸ்லாம் அல்லாதவர்கள் குறிப்பாக இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
RUU355 மசோதாவை நாட்டில் நடந்த மதமாற்றும் பிரச்சினையோடு சேர்த்து ஒருசிலர் பல்வேறு வியாக்கியானங்களையும், விமர்சனங்களையும் செய்து இந்தியர்களை குழப்பி வருகின்றனர். உண்மையில் RUU355-வுக்கும் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனலாம். இருப்பினும், சமீபத்தில் நாட்டில் நடந்த கட்டாய மதமாற்றம், குறிப்பாக பேராக் மாநிலத்தில் வசிக்கும் திருமதி.இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவரின் சம்மதமின்றி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய அவரின் கணவர், கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை மையமாக வைத்து ஒருசிலர் சில அபிப்பிராயங்களை பரப்பி வருகின்றனர். இந்திரா காந்தியின் கணவர், அவர்களின் மூன்று பிள்ளைகளை, 10, 11, 11 மாதக் குழந்தையை இந்திரா காந்தியின் அனுமதியின்றி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார். இந்த மதமாற்றம் செல்லாது என இந்திராகாந்தி உயர்நீதி மன்றத்தில் 2009-ஆம் ஆண்டு முறையீடு செய்தார். இவரின் முறையீட்டை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், இவரின் கணவர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் (Appeal Court) மனு செய்தார். இவரின் மனுவை ஏற்றுக்கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்தது மேல்முறையீடு நீதிமன்றம். ஆனால், இந்திராகாந்தி மீண்டும் பெடரல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்திரா காந்தியின் விவாதத்தை ஏற்றுக்கொண்ட பெடரல் நீதிமன்றம், கடந்த 1 பிப்ரவரி 2018-ல் ஓர் அதிரடி, அதுவும் இறுதியான தீர்ப்பை அறிவித்தது. அதாவது, பேராக் மாநிலத்தில் செய்யப்படும் மதமாற்ற இலாகாவின் (Registrar of Mullafs) செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்தது. காரணம் 18 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் தாய் – தந்தையின் அனுமதியை மதமாற்றத்திற்கு முன்பு பெறவில்லை. அதோடு, பிள்ளைகள் அலுவலகத்திற்கு நேரடியாக வரவில்லை. ஆகவே, மேற்கூறிய இலாகாவின் மதமாற்ற நடவடிக்கை செல்லாது என தீர்ப்பு கூறியது.
ஷாரிய குற்றவியல் சட்டதிருத்த மசோதா (RUU 355)வுக்கு ம.இ.கா தடையாக இருக்காது என எடுத்த முடிவு அதன் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தனிப்பட்ட முடிவோ அல்லது அவரின் சொந்த அரசியல் லாபத்திற்கோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த முடிவு இந்நாட்டு இந்தியர்களின் எதிர்கால நன்மைக்காக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமயத்தினருடன் இந்தியர்கள் மேலும் நட்புறவாகவும், வருங்கால இந்திய வம்சாவளியினர் மலாய் – இஸ்லாம் சமூகத்தினருடன் நல்ல ஒரு நட்புறவான, புரிந்துணர்வுமிக்க சமூகமாக உருவாக்கும் விவேக சிந்தனையாகும். ம.இ.காவின் நிலைப்பாடு, இஸ்லாமிய விவகாரத்தில் இந்தியர்கள் தலையிடுகிறார்கள் என்ற அபிப்ராயத்தை இஸ்லாமியர்களின் எண்ணத்தில் தோன்றாமல் இருக்க எடுக்கும் முயற்சி எனக்கூட கருதலாம்.
இந்நாட்டு இந்தியர்களின் சமயம், கல்வி, கலாச்சாரம், அரசியல் உரிமை, அரசியல் சாசனத்தில் இந்தியர்களுக்கு வழங்கி உள்ள பாதுகாப்புக்கு பங்கம் அல்லது எதிர்ப்பு ஏற்படும்போது ம.இ.கா சும்மா இருந்ததில்லை. உதாரணத்திற்கு, சமீபத்தில் காட் (Khat) என்ற ஜாவி எழுத்து தமிழ்ப்பள்ளிகளில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை செய்தபோது, ம.இ.கா அதனை முழுமையாக எதிர்த்தது. அம்மொழி அரபுமொழி மற்றும் இஸ்லாம் சமயத்தை சார்புடையது எனக் கருதிய இந்திய சமூகம் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு ஆதரவு வழங்கியது ம.இ.கா. அதனால், அத்திட்டத்தினை தமிழ்ப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் திட்டத்தினை கைவிட்டது அரசாங்கம்.
அதுபோலவே, சமீபத்தில் ஒரு சில இந்தியர்களை சமூக தலைவர்களை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் “சோஸ்மா” சட்டத்தின் கீழ் கைது செய்தபோது, அரசியல் வேறுபாடின்றி, அவர்களுக்காக குரல் கொடுத்தது ம.இ.கா. ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வழங்கிய மனிதாபிமான ஆதரவை பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கையாக கருதக்கூடாது என ம.இ.கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
இந்நாட்டு அரசியலிலும் சரி, அரசாங்கத்திலும் சரி, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எந்தவொரு இஸ்லாம் அல்லாத பிரஜையும், இஸ்லாம் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதும், இஸ்லாம் அல்லாத பிரஜை ஷாரிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் எந்த ஒரு பதிவும் இல்லை.
RUU355 மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, இஸ்லாம் சட்டங்கள் எந்த வேளையிலும் இஸ்லாம் அல்லாதவர்கள் மத்தியிலே அமல்படுத்தப்பட மாட்டாது, அதோடு அரசியல் சாசனம் வழங்கிய சமய உரிமைகளை பாதுகாக்கும் என தெளிவாக அறிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த RUU 355 மசோதா எந்த வகையிலும் இஸ்லாம் அல்லாதவர்களை, அதாவது இந்நாட்டு இந்தியர்களை பாதிக்கும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசியல், சமூக, கலாச்சார ஆய்வாளர் டத்தோ எம்.பெரியசாமி, தனது கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறார்.
13 Dec, 2019, by: MN TEAM