MIC News

இந்திய சமூகத்தை மேம்படுத்த பக்காத்தான் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை! – டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர், டிச.12-

2020 வரவு செலவுத் திட்டம் மீதிலான விவாதத்தின்போது நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன், இந்திய சமூகத்திற்காக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வாக்களித்தபடி பயனான திட்டங்களை இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும், இந்திய சமுதாயத்தை உண்மையிலேயே மேம்படுத்தும் நோக்கம் பக்காத்தான் கூட்டணிக்கு இல்லை என்றும் சாடினார்.

“14-வது பொதுத் தேர்தல்களின்போது இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆனால், ஓர் இந்தியன் என்னும் முறையில் 2020 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைப் பார்க்கும்போது பக்காத்தான் கூட்டணி இந்தியர்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளைக் கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை.  உதாரணமாக, இந்தியர்களுக்காக சிறுவணிகத் திட்டங்களுக்காக தெக்குன் நேஷனல் வழி 20 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை தெக்குன் நேஷனல் திட்டத்திற்காக ஒதுக்கியது. இதனுடன் ஒப்பிடும்போது 2020-இல் வழங்கப்படும் 20 மில்லியன் ரிங்கிட் மிகக் குறைவானது” என்பதை மோகன் சுட்டிக் காட்டினார்.

“அதே வேளையில் அமானா இக்தியார் மலேசியா திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித நிதியையும் அரசாங்கம் ஒதுக்கவில்லை. ஆனால், 2017, 2018 ஆண்டுகளில் முறையே 150 மில்லியன் மற்றும் 200 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் அப்போதைய வரவு செலவுத் திட்டங்களில் செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீடுகளும் சிறுவணிகர்களுக்கான திட்டங்களுக்கானவை என்பதால் இதன் மூலமும் பல இந்தியர்கள் பயன்பெற்றார்கள்” என்றும் மோகன் தனது நாடாளுமன்ற உரையில் எடுத்துரைத்தார்.

இதற்குரிய அமைச்சர் இதற்கான விளக்கத்தைத் தருவார் என எதிர்பார்ப்பதாகவும் கேட்டுக் கொண்ட மோகன், மேற்குறிப்பிட்ட இந்த இரு அம்சங்களின் மூலம் இந்தியர்களையும், இந்திய வணிகர்களையும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்பது புலனாகிறது என்றார். இது கவலைக்குரியது காரணம் இதனால் இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சியும் முன்னேற்றமும் மேலும் பாதிக்கப்படும் என்றும் மோகன் கூறினார்.

இந்தியர்களுக்கான கல்வி உதவிகள்

“இதே நாடாளுமன்ற மேலவையில் முன்பு கல்வி துணையமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்திய மாணவர்களுக்கு எஸ்பிஎம் தேர்வுகளுக்குப் பின்னர் போதுமான மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்தார். இந்திய மாணவர்கள் தங்களின் மேற்கல்வி வாய்ப்புகளைத் தொடர்ந்து பெறுவதற்கு மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் மிகவும் முக்கியமாகும். ஆனால் மலேசிய இந்திய புளுபிரிண்ட் திட்டத்தின் வழி 2018-ஆம் ஆண்டுக்கு இந்திய மாணவர்களுக்கு 2200 மெட்ரிகுலேஷன்ஸ் இடங்களை வழங்கியது. இது மொத்த இடங்களில் ஏறத்தாழ 10 விழுக்காடாகும். ஆனால் அப்போதே பல பக்காத்தான் தலைவர்கள் இது போதாது இது மிகவும் குறைவு என குறைகூறினர்” என்று கூறிய டி.மோகன்,

“ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பக்காத்தான் ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. 22 ஜூலை 2019-இல் கல்வி துணையமைச்சர் அறிவித்தபடி, 2018-ஆம் ஆண்டில் 1,804 இடங்கள் மட்டுமே மெட்ரிகுலேஷனுக்காக இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டில் 1,212 மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய வாய்ப்புகளை விட இது மிகவும் குறைவாகும்” என்றும் சாடினார்.

12 Dec, 2019, by: MN TEAM