MIC News

ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு நிகரான தனிக்காட்டுச் சிங்கம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்! -சிவசுப்பிரமணியம் புகழாரம்

கோலாலம்பூர், டிச. 16-

“தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்பதற்கு ஒப்பானவர் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன். இது வெறும் புகழாரம் அல்ல! அவருடன் மிக நெருங்கிப் பழகுவதால் சொல்கிறேன், இந்தியச் சமூகத்துக்கு ஓர் இன்னல் எனின், உடனே தீர்வுக்குரிய கட்டமைப்பை ஆராய்ந்து, தகுந்த காரியதரிசர்களை நியமித்து, எடுத்த காரியத்தை தீரத்துடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்! அனுதினமும் மக்கள் பிரச்சினைகளையும் மஇகா விவகாரங்களையும் அனுவனுவாய் இஷ்டப்பட்டு கவனித்து வருகிறார்… ஒரு நாள் கூட சலிப்புத் தட்டாமல்!” எனக் கூறுகிறார் மஇகாவின் அதிதீவிர விசுவாசி சிவசுப்பிரமணியம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, புனித தீபாவளி மாதத்தில், கிஞ்சிற்றும் மனசாட்சி இல்லாமல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மேலும் சில இந்திய இளைஞர்களை போலீஸ் கைது செய்த போது, ஆளுங்கட்சித் தலைவர்களே மெளனித்திருக்கையில், எதிர்கட்சித் தலைவரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மட்டும்தன் அந்நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்தார். தமீழிழ அகதிகளுக்கு அனுதாபம் தெரிவித்தவர்களை தீவிரவாதிகள் பட்டியல் சேர்ப்பதா? என கடும் கண்டனம் தெரிவித்ததோடு நில்லாமல், உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சட்ட ரீதியாக உதவிட மஇகா வழக்கறிஞர்களை நியமித்து செயல்வீரராக தன்னை மெய்பித்தவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்று மேலவைத் தலைவருமான அவரின் நெடுநாளைய அரசியல் போராட்டவாதியும் அவரின் மேலவை அலுவலக பத்திரிகைச் செயலாளருமான சிவசுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார்.

“இது அரசியல் விளையாட்டல்ல! இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது. இதற்கு அரசியல் சாயம் பூசினாலும், எங்கள் தலைவருக்கு கவலையில்லை. காரணம், அவர் தீர்வின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளவர். தனக்கு சரி என்று பட்டதை, எவ்வித போராட்டம் வந்தாலும் எதிர்த்துச் சாதிக்கும் மனதைரியம் உடையவர். இந்த நற்குணத்தை அவரின் அருகிலிருந்து பார்த்து, நாங்கள் வியந்து போகாத நாளில்லை” என்று மெய்சிலிர்த்துக் கூறுகிறார் சிவசுப்பிரமணியம்.

இன்று 16.12.2019 திங்கட்கிழமை, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பிறந்த தினமாகும். தலைவருக்குரிய விஷேச நாளில், அவரின் சிறப்புகளை எடுத்துரைக்க விரும்பி, தானே அவரின் அருகிலிருந்து அனுபவித்த சம்பங்களின் அடிப்படையில் சிவசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வி அடைந்ததால், அநேக இந்திய மக்களுக்கு சந்தோஷம். மஇகாவுக்கு மரண அடி என்று கூட விமர்சித்தார்கள். இந்த கட்சி, இனி மீண்டு வராது என்றும் எள்ளி நகையாடினார்கள். அன்று கைகைட்டி சிரித்தவர்களின் இன்றைய நிலைமை என்ன? மஇகாவின் நிலைமை என்ன?

சல்லிக்காசு கூட கடன் இல்லாமல், மிக கம்பீரமாக நடைபோடுகிறது மஇகா! கட்சியின் உள்விவகாரங்களுக்கு ஒரேயொரு வட்டமேசை பேச்சுவார்த்தைதான்! எல்லாம் சுமுகமாக கைமாறியது! கட்சியின் தலைமைப் பொறுப்பை கண்ணியத்தோடு ஏற்றுக் கொண்டு, இன்று ஓர் ஆளுங்கட்சியின் அமைச்சர்களுக்கு ஈடாக, தனிக் காட்டுச் சிங்கமாக, தனது அரசியல் சக்தியை நிரூபித்து வருகின்றார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

அதே ஆளுங்கட்சியில் வரலாற்றுத் திருப்பமாக 4 அமைச்சர்கள் உலாத்துகிறார்கள். அவர்களின் உல்லாச உலாத்தலும், அச்சுப் பிரதியில் அள்ளித் தெளித்த வாக்குறுதிளின் நடுப்பக்கத்தை தொலைத்துவிட்டு, என்ன சொன்னோம், என்ன செய்தோம் என்று கூட தெரிந்து கொள்ள மெனக்கெடாமல், சும்மா இருக்கும் சுகமே தனி சுகம் என்று மல்லாகப் படுத்து பாசாங்கு தூக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் 4 அமைச்சர் பெருமக்கள்!

இது எவ்வளவு பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது என்று தீர ஆராய வேண்டிய காலக்கட்டம். ஆளுங்கட்சியின் 4 இந்திய அமைச்சர்கள், மாநிலத்தின் ஒரு துணை முதலைமைச்சர், வரலாற்றிலேயே அதிகமான  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஓர் இந்திய மினி அரசாங்கமே இப்போது உருவாகியிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சவால் விடுத்து, தனி ஆளாக இந்திய சமூகத்திற்காக களப்பணி ஆற்றுவதில் முதல் தரத் தலைவராக பவனி வருகிறார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்!

மஇகாவின் ஏறுமுக அரசியல் மாற்றத்தைக் கண்டு வயிறு எறியும் குள்ளநரிக் கூட்டங்களுக்கு, இன்னமும் ஒரு பழக்கம் உண்டு. மஇகாவின் கடந்த கால தவறுகளையும் துன் சாமிவேலுவையும் இணைத்து பேசுவது. இவர்கள் பழைய ஜோக் தங்கத்துரை போன்றவர்கள். 30 வருடத்திற்கு முன் கோலப்போட்டியை நடத்தி, வட்டார மேன்மக்களாக முன்னேற கங்கணம் கட்டியவர்கள்… இன்னமும் கோலப்போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மங்குனி ஆட்டமெல்லாம் மேடையேறி பழ ஆண்டுகள் கடந்து விட்டன. இனியும் பகல் கனவு கானாமல், பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடி, எஞ்சிய காலத்தை மகிழ்ச்சியாக வாழப் பார்க்கட்டும்.

எங்களை விடுங்கள்.. எங்களுக்கு கடமை இருக்கிறது. வீழ்ந்தாலும் மீசையை முறுக்கு என்கிற இளசுகளின் வெறித்தனப் போக்கோடு பிண்ணி பிணைந்து, எங்கள் மக்கள் பணியில் நாங்கள் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்..எங்களின் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமை கண்காணிப்போடு!

நடமாட்டம் இல்லாத பிரதமர், இருக்கிற பிரதமப் பதவியை ஆறப்போட்டு அடுத்த பிரதமர் யார் என்பதற்கான குடுமிப் பிடி சண்டை, இனத்துவேஷ அரசியல், முட்டால்தனமான அரசு கொள்கைகள், ஊமை அமைச்சர்கள், துயில் கொள்ளாத துணையமைச்சர்கள், சொந்த வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என நாலாப்பக்கமும் இடியாப்பச் சிக்கலில் சிக்குண்டு குப்புறத் தேங்காயாகக் கிடக்கும் ஆளும் அரசாங்கம் எங்கே, புதிய வெற்றிக் கூட்டணி அமைத்து, இப்போதே மஇகாவின் பாரம்பரிய தொகுதிகளில் களப்பணி தொடங்கி, அடுத்தத் தேர்தலில் நாங்கள்தான் இங்கு போட்டியிடுகிறோம்… என்று தைரியமாகச் சொல்லி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மஇகா தலைவர்கள் எங்கே?

மக்கள் சிந்தனைக்கு விடுகிறேன். இந்த வேகமும் விவேகமும் பொருந்திய துணிச்சலான அரசியல் நகர்வுக்கு முழுக் காரணம் டான்ஸ்ரீ விக்ணேஸ்வரன் மட்டுமே. அவருக்குப் பக்கபலமாக துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள், செனட்டர்கள், உயர்மட்ட பொறுப்பாளர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில – தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள், விசுவாசிகள், மஇகா நலன் விரும்பிகள் என ஒரு பட்டாளமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில், மஇகா மீண்டும் அதன் வசந்த காலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்திய சமூகத்தின்  நலன் காக்கும் பலம் பொருந்திய கேந்திரமாக அது உருவெடுக்கும் என்பது உறுதி என அறுதியிட்டுக் கூறும் சிவசுப்பிரமணியம், டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தார்மீக அரசியல் பயணமும், கட்சியை பலப்படுத்தும் உயரிய நோக்கமும், இந்திய சமூகத்தின் உயர்வுக்கு திடமான வழித்தடம் அமைக்கும் கனவும் எல்லாம் வல்ல ஆண்டவன் திருவருளால் கைக்கூட பிரார்த்தித்து, இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை இதன்வழி தெரிவித்துக் கொண்டார்.

15 Dec, 2019, by: I.S.SATHIASEELAN