MIC News

தேசிய கூட்டணிக்கான கலந்துரையாடலுக்கு ‘RUU 355’ மசோதா தடையாக இருக்காது! – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச.7-

ஷரியா நீதிமன்றத்திற்குப் பரவலான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் தாக்கல் செய்த தனிப்பட்ட உறுப்பினர் மசோதா, தேசிய கலந்துரையாடலின் (MUAFAKAT NASIONAL) கீழ் தேசிய முன்னணிக்குப் பதில் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் தடையாக இருக்காது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘RUU 355’ எனப்படும் 1965ஆம் ஆண்டின் ஷரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் அதிகார வரம்பு) சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா விவகாரத்தில் மஇகாவிற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்திற்கான கலந்துரையாடலால் இஸ்லாமிய சட்டம் நாட்டில் நிர்வகிக்கப்படலாம் என்று கவலை இருக்குமா என வினவப்பட்டபோது, முஸ்லிம் அல்லாதாரின் உரிமைக்களுக்கான உத்தரவாதமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் ஒன்றே போதுமானதாக இருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

“RUU 355-க்கு மஇகா எதிரானது அல்ல. இந்த விவகாரத்தில் மசீச கட்சி தனது சொந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கலாம். ஆனால், மஇகாவைப் பொறுத்தவரை, இப்போது ‘RUU 355’ மசோதா கொண்டு வரப்பட்டால், நாங்கள் ஆதரிப்போம்” என நேற்று தலைநகரில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் RUU 355 மசோதாவை ஹடி அவாங் தாக்கல் செய்தார். அந்த மசோதா 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆவது வாசிப்பிற்குச் செல்வதாக இருந்தது. ஆனால், 2ஆவது முறையாக அந்த மசோதா வாசிக்கப்படவில்லை.

இதனிடையே, பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மஇகா ஆர்வமாக இருப்பதாகவும் மலார்க்காரர்கள் மற்றும் இந்திய ஆதரவாளர்களுக்கிடையே சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருப்பதற்கு இவ்விரு கட்சிகளுக்கிடையே இது உதவும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.