கோலாலம்பூர் டிசம்பர் 4
24 ஆளுமைகளை உள்ளடக்கிய தமிழாற்றுப்படை நூலை வெளியிடுவதற்கு கவிப்பேரரசு வைரமுத்து மலேசியாவிற்கு வரக்கூடாது என எதிர்ப்புகள் இருந்த நிலையிலும், தமிழர் படை சூழ வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நேற்று பிரம்மாண்டமாய் வெளியீடு கண்டது.
மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நூல் வெளியீடு கண்டது.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், மலேசிய எழுத்தாளர்களுக்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் உறவுப்பாலம் அமைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என புகழாரம் சூட்டினார்.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழ்மொழியின் இருபத்து நான்கு ஆளுமைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கவிப்பேரரசு வின் முயற்சி வெற்றியடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல சபை அமைவது அரிது, ஒருசேர தமிழறிஞர்களை பார்ப்பது அரிது, தலைசிறந்த தலைவனின் முன்னிலையில் அதை வெளியிடுவது அதைவிட அரிது. ஆனால் அவை அனைத்தும் இன்று ஒருசேர நடந்துள்ளது என மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
ஆண்டாள் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் இந்த நூலை முழுமையாக புரிந்து கொண்டவர்களும் விளங்கிக் கொண்டு வாசித்தலும் குறை கூற மாட்டார்கள் என டத்தோ ஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய காங்கிரஸைப் பொறுத்தவரை டத்தோஸ்ரீ சரவணன் இலக்கியவாதி என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார். தூண் சாமுவேலுக்கு பிறகு கட்சியில் இலக்கியம் சார்ந்த விவகாரங்களில் டத்தோஸ்ரீ சரவணன் தான் அதிகம் பங்கேற்கிறார் என்றார் அவர். அதோடு கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறந்த தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டார். சிறந்த தலைமைத்துவ மிக்க இரண்டு தலைவர்கள் கைகோர்க்கும் போது எதுவும் சாத்தியமாகும் என அவர் கூறினார். அதோடு தமது நூலை இங்கு வெளியீடு செய்வதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்புகள் இருந்த நிலையில் மக்கள் இதில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்தாளர்களும் பிரமுகர்களும் இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழாற்றுப்படை 24 ஆளுமைகள் குறித்த தொகுப்பு என்றாலும் அது தமிழுக்கு மகுடம் சூட்டும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். அந்த நூலை தமிழர்கள் படிக்க வேண்டியது அவசியம் என தமிழறிஞர்கள் குறிப்பிட்டனர்.