மலேசிய அரசியலில் இந்திய சமுதாயத்தினர் மத்தியில் அதிகளவில் விமர்சனங்களுக்கு ஆளான ஒரே தலைவர் துன் சா. சாமிவேலு. டத்தோ ஸ்ரீ பட்டம் பலருக்குக் கிடைத்தாலும், இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை டத்தோ ஸ்ரீ என்றால் அது சாமிவேலு தான்.
இன்று அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று துன் பட்டம் வைத்திருந்தாலும். இன்றும் அதே பழைய கம்பீரத்துடன் பாத்தே உடை அணிந்து துன் ரசாக் மண்டபத்தில் நுழைந்த அடுத்த கனமே “டத்தோ ஸ்ரீ… டத்தோ” ஸ்ரீ என மக்கள் சாமிவேலுவைச் சூழ்ந்துகொண்டு, நலம் விசாரித்தனர்.
“டத்தோ ஸ்ரீ உங்களைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” எனப் பலர் அவரிடம் நலம் விசாரித்தோடு, குடும்பம் குடும்பமாக அவருடன் புகைப்படம் எடுத்தனர். ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், ம.இ.காவின் மூத்த தலைவர் சா.சாமிவேலுவுக்குச் சிறப்பு செய்து ஆசி பெற்றார். அதோடு ம.இ.காவின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோரும் ஆசிபெற்றனர். பல ம.இ.கா கிளைத் தலைவர்களும் “டத்தோ ஸ்ரீ …. டத்தோ ஸ்ரீ” என்று துன் சாமிவேலுவைப் பார்த்துப் பூரித்தனர். சிலர் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டனர்!