Mi-Voice MIC News

மக்களுக்கும், சேவைகளுக்கும் அந்நியர் அல்ல மஇகாவின் நம்பிக்கை நட்சத்திர வேட்பாளர் பி. சண்முகம் – தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

ஆயேர் குரோ,  நவம்பர் 9 – மலாக்கா மாநில காடேக் சட்டமன்றத் தொகுதியின் மஇகா வேட்பாளராக தேர்வு பெற்றுள்ள பி. சண்முகத்தை விட தகுதியானவர் இருக்க வாய்ப்பில்லை என ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கருத்துரைத்துள்ளார்.

“ம.இ.கா வேட்பாளர் பி. சண்முகம் மலாக்கா வாழ் மக்களிடையே புதியவர் அல்ல. நீண்ட காலமாக மலாக்கா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர். மலேசிய இந்தியர்களின் தலையாய கட்சியான மஇகா, தேசிய முன்னணி கூட்டணி கீழ்  வேட்பாளராக அவர் பிரதிநிதிப்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் வெற்றிக்கான உத்வேகத்தை மேலோங்க செய்கிறது,” என விக்னேஸ்வரன் கெராக் மலேசியா நிருபரிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வேட்பாளர் பி. சண்முகம் 20 ஆண்டுகளுக்கு மேல் அவ்வட்டார மக்களுடன் இணக்கமான உறவினை வளர்த்து தொடர் சேவைகளை வழங்கி வந்துள்ளார். கோத்தா மலாக்கா தொகுதி ம.இ.கா தலைவரான இவர் மத்திய செயலவை உறுப்பினராகவும், முன்னாள் மலாக்கா மாநில இளைஞர் அணி தலைவராகவும் தன் அரசியல் பணியில் மிகவும் தீவிர ஆற்றல் கொண்டவர்.

மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிடும் ஒரே இந்தியரான  பி. சண்முகம் மக்களின் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளார் என்பதை தாம் மனப்பூர்வமாக நம்புவதாக விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

வடக்கு போர்னியோ பல்கலைக்கழக கல்லூரியில் வணிக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற தொழிலதிபரான பி. சண்முகம், தேசிய இளைஞர் தலைமைத்துவ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காடேக் தொகுதியில் பி. சண்முகம் ஆறுமுனைப் போட்டியை எதிர் நோக்குகிறார். டிஎபி சாமிநாதன், பெர்சத்து முகமட் அமிர் ஃபிட்ரி முஹராம், புத்ரா வேட்பாளர் லைலா நொரின்டா மஒன், சுயேட்சைப் போட்டியாளர்கள் அஷாஃபென் அமின், மோஹன் சிங் ஆகியோர் களமிறங்கும் இத்தேர்தலில் வாக்காளர்கள் மக்கள் நலன் பேணும் வேட்பாளர் யார் என்பதை கண்டிப்பாக அறிந்திருப்பாளர்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதி வெரும் 307 வாக்குகளில் மட்டுமே எதிரணியினர் வசம் போன வேளையில் இத்தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுக்கும் என்பதில் தான் மிகவும் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் விக்கினேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலாக்கா மாநில பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 28 வேட்பாளர்களை தனிச்சையாக களமிறக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மாநில மந்திரி பெசார் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் வரும் 20 நவம்பர் 2021 வாக்காளிக்கும் தேதியாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://gerakmalaysia.com/2021/11/09/tamil-prnmelaka-calonmic/