Mi-Voice MIC News

‘பிரிஹாதின்’ உதவிநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீட்டு வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! – சரவணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர் – மக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலான அரசாங்கத்தின் பரிவுமிக்கத் திட்டமான “பந்துவான் பிரிஹாதின் நேஷனல்” (BPN) உதவிநிதி கிடைக்கப்பெறாதவர்களுக்கு, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ள மேல்முறையீட்டு மறுவாய்ப்பானது பொதுமக்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும்.

இந்த சவால்மிகுந்த காலக்கட்டத்தில் வரிய நிலை மக்கள் யாரேனும் கைவிடப்பட்டுவிடக் கூடாது என்பதில் புதிய தேசிய கூட்டணி அரசாங்கம் கண்ணுங்கருத்துமாக இருப்பதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த மறுவாய்ப்பு அமைவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.

“அந்த நிவாரண உதவிக்கு விண்ணப்பித்தும், முழுமையில்லாத தரவுகளினால் உதவிநிதி நிராகரிக்கப்பட்டவர்கள், வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் தத்தம் பகுதிகளிலுள்ள வருமான வரி வாரியத்தில் (LHDN) தகுந்த ஆதார தரவுகளையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து மேல்முறையீடு செய்யலாம்” என இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சரவணன் பொதுமக்களை, குறிப்பாக இந்திய சமூகத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

“தற்போது வேலையிழப்புக்கு ஆளானவர்களும், கோவிட்-19 பெருந்தொற்றினால் வருமான இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும், அதனை நிரூபிக்கும் ஆதாரக் கடிதங்களை (rayuanbpn@hasil.gov.my) எனும் வருமான வரி வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மேல்முறையீடு செய்யலாம்” என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.

“மலேசிய நிறுவனங்களின் ஆணையத்தில் (SSM) பதிவு பெற்றுள்ள தனிநபர் வணிகங்கள் அல்லது தம்பதியரின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருந்தால், நடப்பு வருமானத்தை நிரூபிக்கும் ஆதாரத்துடன் உதவிநிதிக்காக மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது” என்பதையும் சரவணன் சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு மாநில அரசாங்கத்தின் நிர்வாக அமைப்பின்படி, மே 11 அல்லது மே 12 முதல் வருமான வரி ஆணையத்தின் வட்டார அலுவலகங்கள் இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று குறிப்பிட்ட சரவணன், இந்த அரிய வாய்ப்பை நம் இந்திய மக்கள் நழுவ விடாது, முறையே பயன்படுத்தி நன்மைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சவால்மிகுந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்து முடங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட “பந்துவான் பிரிஹாதின் நேஷனல்” (BPN) எனும் நிவாரண உதவி திட்டம், விண்ணப்பத்தாரர் சிலரின் முழுமையற்ற தரவுகளாலும், கூடுதல் வருமானத்தை காட்டியிருப்பதாலும் நிராகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

“எனினும், கடந்த காலங்களில் சம்பாதித்த கூடுதல் வருமானம் இந்த ஆண்டு இல்லை என்றும், இன்னும் சிலர் கடந்த சில மாதங்களாகவே வேலையின்றி அல்லலுற்று வருவதாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவர்களின் துயரங்களுக்கு விடையளிக்கும் வகையில், நிவாரண உதவிநிதிக்கான மேல்முறையீடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்” என்றும் சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அரிய வாய்ப்பு குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள https://bpn.hasil.gov.my எனும் அகப்பக்கத்தை வலம் வருமாறு மஇகா தேசிய துணைத் தலைவருமான சரவணன் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த உதவித்திட்டத்தின் முதல் கட்டமாக 83 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 9.3 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், அண்மையில் மேலும் 23 லட்சம் விண்ணப்பங்களும் மேல்முறையீடுகளும் அங்கீகரிக்கப்பட்டு 1.7 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் சரவணன் தெரிவித்தார்.