கோலாலம்பூர், 04 செப்டம்பர் (பெர்னாமா) — ம.இ.கா-வின் தலைவர் பதவியைத் தவிர இதர அனைத்து உயர்மட்ட பதவிகளுக்கான கட்சித் தேர்தல் இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்து முடிந்த கிளை அளவிலான தேர்தலைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய செயலவை இம்முடிவை எடுத்திருப்பதாக ம.இ.கா பொதுச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் கூறியிருக்கிறார்.
அண்மையில், அம்னோவின் கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு சங்கங்களின் பதிவிலாகா, ஆர்.ஓ.எஸ் அனுமதி வழங்கியிருந்தது.
எனவே, ம.இ.கா-வும் கட்சித் தேர்தலை ஒத்திவைக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் டத்தோ அசோஜன் அதனை மறுத்தார்.
”தேர்தலுக்கான வாக்காளர்கள் அனைவரும் தயாராக இருக்கின்ற நிலையில், இப்போது அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெறும். தேர்தலைத் ஒத்திவைக்கும் நிலை ம.இ.கா-விற்கு ஏற்படவில்லை,” என்றார் அவர்.
அக்டோபர் மாத இறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு நாட்டில் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் சாத்தியம் இருப்பதால் கட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
”தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ் சரியான அறிவிப்பு வரும் பட்சத்தில், அடுத்தக்கட்ட தேர்தலை ம.இ.கா நடத்தும்,” என்று அசோஜன் தெளிவுபடுத்தினார்.
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற கட்சியின் தலைவர் பதவிக்கானத் தேர்தலில் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இரண்டாவது முறையாக போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலில் கட்சியின் துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் மத்தியில் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘ஜனநாயக முறைப்படி கட்சி நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கட்சி இதுவரை எவ்வித விதிமுறையையும் விதிக்கவில்லை. யார் வேண்டுமானும் போட்டி போடலாம்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
அதோடு, அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் அனைத்து செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றியே இந்த தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த அசோஜன், முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று விவரித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தேர்தலில் வாக்களிப்பு முறையையும் அவர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
”அதிகமான வாக்களிப்பு மையங்கள் இல்லாமல், குறைந்த மையங்களில் அதிக நேரத்தை வழங்கி வாக்களிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு கட்சி ஆராய்ந்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பல மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட ம.இ.கா பொதுத் தேர்தல் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
— பெர்னாமா
Add Comment