Mi-Voice MIC News

மறுசுழற்சி உலோகப் பொருட்கள் வணிகம் செயல்பட அனுமதி! நடைமுறைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துச் செயல்படுமாறு டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள்!

கோலாலம்பூர், செப் 8: மறுசுழற்சி மற்றும் உலோகப் பொருள்கள் சார்ந்த வணிகர்கள், தங்கள் வணிகத்தைத் தொடங்கலாம் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் இன்று அதற்கான அனுமதியை சர்வதேச பரவல் கட்டுப்பாடு செயலவைச் சந்திப்பில் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் கட்டங்கட்டமாக பல தொழில்துறைகள் திறக்கப்பட்ட நிலையில், மறுசுழற்சி உலோகப் பொருள்கள் சார்ந்த வணிகர்கள் தங்கள் தொழிலைத் தொடர முடியாத சூழல் இருந்து வந்தது. அதற்கான அனுமதியைப் பெற தொடர்ச்சியாக நடந்த முயற்சியில் இன்று அதற்கான அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றின் பரவல் இன்னும் இருந்து வரும் நிலையில், பொருளாதாரச் சிக்கலையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்களும், முதலாளிமார்களும், தொழிலாளர்களும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கத் தவறக் கூடாது.

நாட்டில் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டாலும் இன்னும் முழுமை பெறாத நிலையில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவ, மறுசுழற்சி உலோகப் பொருட்கள் சார்ந்த தொழில் புரியும் அனைத்து வணிகர்களும் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து நடத்த வாழ்த்துகள் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்!