தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளை அனுப்பியது ம.இ.கா!
10 நாளில் 10 லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்க ம.இ.கா ஏற்பாடு
நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை-டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ம.இ.கா சார்ந்தவர்களிடம் மட்டுமே நிதி வசூல்-டத்தோஸ்ரீ எம்.சரவணன்
கோலாலம்பூர், மே 19-
தமிழக மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ம.இ.கா 110 சுவாசக் கருவிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் 10 நாளில் 10 லட்சம் வெள்ளி நிதியுதவியை வழங்க ம.இ.கா ஏற்பாடு செய்து வருவதாக ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
அதேநேரத்தில் இந்த உதவிநிதி ம.இ.கா சார்ந்தவர்களிடம் மட்டுமே பெறப்படும். ம.இ.கா சார்ந்த வர்த்தகர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களிடம் மட்டுமே இந்த உதவிநிதி பெறப்படும். பொது மக்களிடம் வசூல் செய்யப்படாது. ஆனால், அந்த நிதியை தாமாக முன்வந்து வழங்க விரும்பினால் தாராளமாக அவ்வாறு செய்யலாம் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
ம.இ.கா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ சரவணன் இருவரும் கூட்டாக தகவல்களை மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களுக்கு விடுத்திருந்த நிலையில்
அவரது கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளுடன் உதவிநிதியையும் ம.இ.கா வழங்குவதாக தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
நமது தொப்புள் கொடி உறுவுகளுக்கு உதவ வேண்டிய நமது கடமையாகும். ம.இ.கா மனிதாபிமான அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை இதுவாகும் மலேசியாவில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதை கவனிக்காமல் தமிழகத்திற்கு மட்டும் உதவி வழங்குகிறார்கள் என்று ஒரு சிலர் பேசுகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மலேசியாவும் இந்தியாவும் நமது சொந்தங்கள்தான். இது தொப்புள் கொடி உறவு. ஆகையால் ம.இ.கா இரண்டுக்கும் தமது பங்கை ஆற்றும். இதனால் மலேசியா மற்றும் தமிழ்நாட்டுக்கான இருவழி உறவு நீடிக்க இது துணை புரியும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
இந்த சுவாசக் கருவியின் தேவை அவர்களின் சுமையை கொஞ்சம் குறைக்கும். ஒரு சுவாசக் கருவியை இருவர் பயன்படுத்த முடியும். ஒரு சுவாசக் கருவியின் விலை கிட்டத்தட்ட 7,000 வெள்ளியாகும். இதில் முதற்கட்டமாக 100 சுவாசக் கருவிகள் நேரடியாக சீனா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நே்டியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்று சேரும் நிலையில் சுகாதார அமைச்சர் அதனை பெற்றுக் கொள்வார் என்றும் எஞ்சிய 10 சுவாசக் கருவிகள் நாளை அனுப்ப இருப்பதாகவும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
மலேசியாவில் கோவிட்-19 தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இந்தியக் குடும்பங்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்த ம.இ.கா. இது வரையில் 65,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது எனவும் அவ்வெண்ணிக்கை மித்ராவின் உதவி இல்லாமல் ம.இ.கா. தனித்து வழங்கிய எண்ணிக்கை எனவும் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தற்போதுள்ள சூழலைப் பார்க்கும் பொழுது சிலாங்கூரில் அவ்வாறான உதவிகளுக்கானத் தேவை அதிகமாக இருப்பதை ம.இ.கா. உணர்கிறது. தொகுதி பாகுபாடு இல்லாமல் உதவிகள் தேவைப்படுகிற இடங்களில் ம.இ.கா. உரிய சேவையை ஆற்றுகிறது என தாம் நம்புவதாக தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
தமிழகத்திற்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி கட்சியின் உறுப்பினர்களும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கொடை நெஞ்சங்களும் வழங்கும் நிதி ஆகும். தற்போது அனுப்பப்படும் சுவாசக் கருவிகளை தமிழக சுகாதார அமைச்சர் பெற்றுக் கொள்ளும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச இருப்பதாகவும் டத்தோஶ்ரீ சரவணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மலேசிய அரசாங்கம் 50 சுவாசக் கருவிகளை தமிழகத்திற்கு அனுப்பி இருந்தாலும் அவர்களின் தேவையை கருதியும் தற்போதைய கோவிட்-19 சூழலைக் கருதியும் ம.இ.கா இந்த உதவியை செய்துள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.
https://www.facebook.com/324916217987814/posts/1136769150135846/
Add Comment