Mi-Voice MIC News

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” – சரவணனின் ஆசிரியர் தின செய்தி

தான் நின்ற இடத்திலேயே இருந்து தன்னிடம் வருபவர்களை ஏணிப்படிகளாக ஏற்றி விடும் உன்னதனமான சேவையாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

தமிழன் வாழ்வியல் என்பது உலகத்தின் மிகச்சிறந்த பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்று அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக ஆசிரியர்களை வைத்துள்ளான். காரணம் ஒருவன் வாழ்வில் மிக முக்கிய நபராக இந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்களை செம்மைப்படுத்தி, சிந்திக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்கிவிடுவதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆசிரியர்கள் அவர்களின் ஈடு இணையற்ற சேவையை வழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் இன்று வாழ்வில் வெற்றி பெற்றிருக்கிறான் என்றால் அதற்கு ஏதோ ஒரு வகையில் ஆசிரியர்கள் காரணமாக இருந்திருப்பார்கள். தன்னலமற்று, தன்னிடம் கல்விகற்க வரும் மாணவர்களைத் தங்கள் குழந்தைகள் போல் நினைத்து தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் நன்றிக்குரியவர்.

உதவுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் உதவுபவர்களே ஆசிரியர்கள். அவர்களின் மாணவர்கள், நாளை முக்கிய பதவியில் இருக்கலாம், உயர்ந்த நிலையில் இருக்கலாம். ஆனால் ஆசிரியரைத் திரும்பிப் பார்த்து எதுவும் செய்யப்போவதில்லை. இது தெரிந்திருந்தும் ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.

எப்போதுமே ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாது, வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றைய சூழலில் உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள், சமூக சூழல், சமுதாய சிந்தனை என்று பல்வேறு சூழலுக்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான் என்பது பணத்தினால் மட்டுமல்ல, குணத்தினாலும் தான். இன்னும் சொல்லப்போனால் நல்லவனாக இருப்பதன் முக்கியத்துவமும் போதிக்கப்பட வேண்டும். மனிதத்தை இழந்து வாழும் மானுடம் நமக்கு வேண்டாம்.

பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் ஆசிரியர்களின் சேவைக்கு நன்றி சொல்லும் இந்நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்வோம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. ஆனால், தனக்குப் பிறர் செய்த நன்றியை மறந்தவருக்கு முக்தி இல்லை. கற்றுத்தந்த வித்தைக்காக என்றென்றும் நன்றியோடு இருப்போம்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளும், நன்றிகளும்.

https://selliyal.com/archives/229901