Mi-Voice MIC News

ம.இ.காவிடம் மன்னிப்புக் கேட்பீர்- கெடா மந்திரி புசாருக்கு சிவராஜ் சூளுரை

கோலாலம்பூர் , 5 டிசம்பர் (பெர்னாமா) — கெடா, அலோர் ஸ்டார், தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பிலான பிரச்சனை ஒரு முடிவில்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது.

ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் ம.இ.கா வை கடுமையாக விமர்சித்து சாடியிருப்பது குறித்து கெடா மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர் அவசியம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுவதால், ம.இ.கா. சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்று முகமட் சனுசி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, ம.இ.கா மற்றும் ஜ.செ.க தலைவர்கள் மதுப் போதையில் உளறுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அவரின் இந்தக் கருத்து எந்த வகையிலும் ஏற்புடையாது அல்ல என்றும் அக்கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிவராஜ் சந்திரன் சாடி இருக்கிறார்.

”ஒரு மாநில முதல்வர் என்றால் மாநிலத்தில் நிகழும் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். ஆனால், இவருக்கு அந்த தலைமைத்துவமே இல்லை. ஆலயம் உடைப்பு குறித்து ம.இ.கா கேள்வி எழுப்பியவுடன் அவர் இம்மாதிரி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.” என்றார் அவர்

இந்தியர்களின் தாய் கட்சி என்று அழைக்கப்படும் ம.இ.கா சமூக பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக, ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், மற்றும் கல்வி சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வரும் ம.இ.காவை அவர் தவறாக பேசியிருப்பது வேதனையளிப்பதோடு பாஸ் கட்சியின் தலைமைத்துவத்தை அவர் அவமதிக்கும் வகையிலும் உள்ளதாகவும் சிவராஜ் சாடினார்.

”கெடா மந்திரி புசார் கூறியதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், பதவியிலிருந்து விலகுவது நல்லது. ஏனென்றால், பாஸ் கட்சியில் நிறைய தலைவர்கள் உள்ளனர்.”என்றார் அவர்.

இதனிடையே, கெடா மந்திரி புசாரின் இந்த சாடல் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில், பிரதமர், ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் இதர தலைவர் அனைவரும் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.bernama.com/tam/news.php?id=1909119