MIC Youth

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் ‘இ-பெலியா’ அகப்பக்கம் வாயிலாக வழங்கப்படும் வாய்ப்புகளை தவற விடாதீர்!

புத்ராஜெயா, ஜூன் 10: இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இ-பெலியா அகப்பக்கத்தின் வாயிலாக வழங்கப்படும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி பலன்பெறுமாறு தேசிய ம.இ.கா இளைஞர் பகுதியின் செயலாளர் தியாகேஷ் கணேசன் இந்திய இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அகப்பக்கமானது வேலை வாய்ப்புகள், தொழில்முனைவோர் வாய்ப்புகள், திறன்பயிற்சி வாய்ப்புகள், நிதி விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் அரசாங்கச் சலுகைகள் என இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, இது 14 அமைச்சுகளின் கூட்டுமுயற்சியில் அமையப்பெற்ற அகப்பக்கம் என்பதால், இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கும் ஒட்டுமொத்த சலுகைகளையும் இங்கே அறியக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. இது இளைஞர்களின் செயல்திறனுக்கு முன்னுரிமை வழங்கும் 4.0 தொழிற்புரட்சியின் ஒரு செயல்பாடாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“நம் இளைஞர்களின் இந்தக் கனவை நினைவாக்கிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான் அவர்களுக்கு மஇகா இளைஞர் பகுதியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இந்த பயன்மிக்க அகப்பக்கத்தை நம் இந்திய இளைஞர்கள், குறிப்பாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் தொழில்முனைவோராக முன்னேறத் திட்டமுள்ளவர்களும் இதனை முழுமையாகப் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எனவே, நமது இளைஞர்கள் http://ebelia.iyres.gov.my எனும் அகப்பக்கத்திற்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என தியாகேஷ் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.thesentral.my/2020/06/10/tamil-micyouth-kbs-ebelia-opportunities/