கோலாலம்பூர், மே 21-
மலேசிய வரலாற்றில் 3 பிரதமர்கள், 3 அரசாங்கம், 3 பேரரசர்கள் ஆகியோருடன் பணியாற்றியுள்ள வரலாற்றைக் கொண்ட டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஒரு சரித்திர நாயகன் என்று மக்களால் போற்றப்பட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு ஒரு மேலவைத் தலைவராக பணியாற்றியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு சரித்திர நாயகன் என்று ம.இ.கா மற்றும் இந்திய சமுதாய மக்களால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு செனட்டராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் செனட்டர் பதவி காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதியோடு பூர்த்தியாவதால் மேலவைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்நாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடியாசின் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கெடா, கிளந்தான் ஆகிய மாநிலங்களின் சுல்தான்கள் மாமன்னர்களாக பதவி வகித்த காலத்திலும் நடப்பு பேரரசராக இருக்கும் பகாங் ஆட்சியாளர் துவான் அப்துல்லா அவர்களுடனும் பணியாற்றியுள்ள பெருமைக்குரியவராவார்.
இந்நிலையில் தேசிய முன்னனி, நம்பிக்கை கூட்டணி மற்றும் நடப்பு அரசாங்கமான தேசிய கூட்டணி என்று 3 அரசாங்கங்களுடன் பணியாற்றியுள்ள
வரலாற்றுக்கு சொந்தக்காரரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா தேசிய தலைவராகவும் பதவி வகித்து முத்திரை பதித்துள்ளார். மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவர் பதவி ஜூன் 22ஆம் தேதிதான் முடிகிறது என்றாலும் அடுத்த மேலவை கூட்டம் ஜூலை மாதம்தான் தொடங்கும் என்பதால் மே 18ஆம் தேதியே மேலவையில் தமது இறுதி உரையை முடித்துக் கொண்டுள்ளார் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.
மலேசிய நாடாளுமன்ற மேலவையை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதோடு சர்வதேச அரங்கிலும் தனி மரியாதையைப் பெற்று மலேசிய நாட்டுக்கு உயரிய கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் என்றால் அது மிகையில்லை.
ம.இ.கா தேசியத் தலைவராக பதவி வகித்தாலும்கூட மேலவையை அரசியல் ரீதியாக இல்லாமல் நியாயமான முறையில் நடுநிலையாக வழிநடத்திய விதத்தை ஆளுங்கட்சி, எதிர்கட்சி செனட்டர்கள், அமைச்சர்கள் என்று பலரும் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். நாடாளுமன்ற மேலவையில் தம்மை சந்திக்க வருகை தரும் செனட்டர்கள், அமைச்சர். ஆகியோரை அரசியல் பேதமின்றி சந்தித்துப் பேசும் உன்னதத் தலைவர். இத்தகைய சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட தலைவரின் சேவை நாட்டுக்குத் தேவை என்பதில் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
– தேசம் அரசியல் களம் குணாளன் மணியம்
Add Comment