Mi-Voice MIC News

கோவிட் 19 காலகட்டத்தில் இந்திய மக்களுக்கு அடிப்படை உதவி வழங்க ‘ம.இ.கா உதவி’ செயலி அறிமுகம்

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் வகையில் ‘ம.இ.கா உதவி’ எனும் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

மலேசிய இந்தியர்கள் மட்டுமன்றி மனிதாபிமான அடிப்படையில் மலாய்க்காரர்கள், சீனர்கள் என்று அனைவருக்கும் உதவி வழங்கும் வகையில் தமிழ்மொழியில் ‘ம.இ.கா உதவி’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் செயலி வடிவம் காணும். இந்தியர்கள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினை, கல்வி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ‘ம.இ.கா உதவி’ செயலி தீர்வு காண உதவும் என்று ம.இ.கா தலைமையகத்தில் ‘ம.இ.கா உதவி’ செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்த போது மலேசிய மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இத்தகைய நாடு தழுவிய நிலையில் இருக்கும் மக்களுக்கு ‘ம.இ.கா உதவி’ செயலி மூலம் உதவி வழங்கப்படுவதால் மக்களுக்கான உதவி நேரடியாக அவர்களுக்கு சென்று சேரும். அதேநேரத்தில் இதன்வழி உதவி பெற்றுக் கொண்ட மக்களின் தகவல்களும் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

இந்த ‘ம.இ.கா உதவி’ செயலி மக்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட இணையதளத்தில் இன்று பதிவுகள் தொடங்குகின்றன. இந்த ‘ம.இ.கா உதவி’ இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் விரைந்து வழங்கப்படும் என்றும் இதற்காக பலர் நன்கொடை வழங்கியுள்ளதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த ‘ம.இ.கா உதவி’ செயலி வழி சேகரிக்கப்பட்ட பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மக்களுக்கு உதவி வழங்கும் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த ம.இ.கா உதவி திட்டத்தின் கீழ் ம.இ.கா உறுப்பினர்கள் அல்லாத மக்களுக்கு உதவி வழங்கப்படும். இந்த உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும். எனினும் மாநில ம.இ.கா, தொகுதி, கிளை அளவில் உதவி தேவைப்படும் மக்கள் ம.இ.கா உதவி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்றார் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.

இந்த ம.இ.கா உதவி செயலியின் வழி உதவி பெற்றுக் கொள்ள விரும்பும் மக்கள் https://utavi.com.my. எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

– தேசம் செய்திகள் குணாளன் மணியம்

About the author

Editor

Add Comment

Click here to post a comment