Mi-Voice MIC News

தன்னலங் கருதாது, கடமையுடணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களை மனதில் நிறுத்திப் போற்றுவோம்! -டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாக, அவர்களுக்கு வழிகாட்டிகளாக, பயிற்சிகளை வழங்குபவர்களாக, ஆலோசனைகள் வழங்குபவர்களாக, நல்ல நெறிகளைக் கற்றுத் தருபவர்களாக – இப்படி பல்வேறு நிலைகளில் இருந்து, பணியாற்றி வரும் ஆசிரியர் பெருமக்களை நன்றியுணர்வுடன் போற்றி வாழ்த்த வேண்டும் என்று, ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்கேன்ஸவரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

வகுப்பறைகளில் சிறந்த முறையில் உருவாக்கப்படும் மாணவர்கள் மட்டுமே எதிர்காலத்தில், தங்களது குடும்ப நலன் – சமுதாய நலன் – நாட்டின் நலன்களுக்கு உழைக்க முடியும், பாடுபட முடியும் என்ற சிந்தனையை முன்வைத்து, வகுப்பறைகளில் கற்றுத் தருபவர்கள் ஆசிரியர் பெருமக்களே. அதுமட்டுமின்றி, இவர்களை அன்பாக வழிநடத்திச் செல்பவர்களும் ஆசிரியர் பெருமக்களே என்று எண்ணும்பொழுது, ஆசிரியர் பெருமக்கள் இந்த மானிட மக்களுக்கு எத்துணை முக்கியமானவர்கள் என்பததை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இன்று மாணவர் உலகமும், ஒரு நவீனக் காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறது. கையடக்கத் தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவாகிவிட்டது என்றாலும், ஓர் ஆசிரியர் இல்லாமல் இவற்றினைக் கூட முறையாக கற்றுக் கொள்ள இயலாது.

தன்னலங் கருதாது, கால நேரம் பாராது, மாணவர்களின் எதிர்கால நலன்களுக்காக கடமையுணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களை, மனதில் என்றென்றும் நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய ஆசிரியர் தினத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகாவின் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தமது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.muthamil.com.my/தன்னலங்-கருதாது-கடமையுட/