Mi-Voice MIC News

தொழிலாளர்களின் ஊதியக் கணக்கினை செயல்முறைப்படுத்த நிறுவன அதிகாரிகளுக்கு சிறப்பு அனுமதி – மனிதவள அமைச்சு

புத்ராஜெயா, மார்ச் 30: கோவிட்-19 நோய்ப்பரவலினைத் தடுக்கும் விதத்தில் அரசாங்கம் விதித்திருக்கும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை அமலாக்கத்தில் இருக்கும் வேளையில், தனியார்த்துறையினர் தங்கள் தொழிலாளர்களுக்கான ஊதியக்கணக்கினை செலுத்துவதற்கான செயல்முறைகளை மனிதவள அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

“நாட்டின் சட்டவிதிகளுக்கு ஏற்றவாறு தனியார்த்துறையினர் தங்கள் தொழிலாளர்களுக்கான ஊதியத்தினைக் கணக்கிட்டு செலுத்த நிறுவனத்தின் கணக்கியல் மற்றும் மனிதவளத் துறைகளின் இரண்டு அதிகாரிகள் மட்டும்  31 மார்ச் அல்லது 1 ஏப்ரல் ஏதேனும் ஒரு தினத்தில் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்,” என  மனிதவள அமைச்சு தமது அறிக்கையில் கூறியுள்ளது.

அந்த நிறுவன அதிகாரிகள் அலுவலகங்களுக்குச் செல்வதற்கான அனுமதி பாரங்களை முதலாளிமார்கள் தயார் செய்ய வேண்டும். அப்பாரங்களில் அதிகாரிகளின் பெயர், பொறுப்பு, அடையாள அட்டை எண், முதலாளிமார்களின் தொடர்பு விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல ஏதுவாகவும், அமலாக்க அதிகாரிகளின் பரிசோதனைக்காகவும் நிறுவன அதிகாரிகள் அப்பாரங்களை உடன் கொண்டிருத்தல் அவசியம்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் முதலாளிமார்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தினை வழங்க வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thesentral.my/2020/03/30/tamil-ksm-companies-salary-procedures/