Mi-Voice MIC News

இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் 372 மலேசியர்கள் நாளை காலை தாயகம் திரும்புவர்

கோலாலம்பூர், மார்ச் 23-  கோவிட் 19 நோய் பரவல் காரணமாக தமிழக விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் மலேசியர்களை சிறப்பு விமானச் சேவைகள் மூலமாக மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செலவினையும் ம.இ.கா ஏற்றுக்கொண்டது அனைவரும் அறிந்ததே. முதற்கட்டமாக ஞாயிறு காலை சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலிருந்து 369 மலேசியர்கள் 2 ஏர் ஆசியா விமானங்கள் வாயிலாக நாடு திரும்பினர்.

அடுத்தக்கட்டமாக, மேலும் 372 பயணிகளை மீட்க இரண்டு ஏர் ஆசியா விமானங்கள் இன்று தமிழகம் புறப்படவுள்ளன என்று ம.இ.கா துணைத்தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உறுதிப்படுத்தினார்.

இத்தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட ம.இ.கா பொதுச்செயலாளர் டத்தோ மு. அசோஜன், நேற்று இந்தியா முழுமையும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இரண்டாம் கட்ட மீட்பு நடவடிக்கை சிறிய தாமதத்திற்கு உள்ளானது என விளக்கம் கூறினார். ம.இ.கா ஏற்பாட்டிலான இந்த இரண்டு விமானங்களும் சென்னை, திருச்சிக்கு இன்று இரவு புறப்பட்டு அங்குள்ள 372 பயணிகளை ஏற்றிக் கொண்டு நாளை மார்ச் 24 செவ்வாய்க்கிழமை நாடு திரும்பும் என மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் நாடு திரும்ப ரிங்கிட் 1.05 மில்லியன் செலவில் ம.இ.கா 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் நலன், பாதுகாப்பு கருதி ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தது ம.இ.காவின் சமுதாய அக்கறையினையும், கடப்பாட்டினையும் மெய்ப்பிக்கின்றது என டத்தோ அசோஜன் குறிப்பிட்டார்.

https://www.thesentral.my/2020/03/23/tamil-strandedmalaysians-2ndbatch-returns/