கோலாலும்பூர், மார்ச் 18: கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தற்போது நாட்டையே அச்சுறுத்தி வரும் வேளையில், அதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் நலனையும், எதிர்காலத்தையும் பேணுவதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உறுதி கூறினார்.
“கோவிட்-19 நோய் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்த பிறகே அரசாங்கத்தின் மீட்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, கோவிட்-19 காரணமாக சம்பளமற்ற விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசின் உதவி நிதியாக ஆறு மாதங்களுக்கு தலா ரிங்கிட் 600 வழங்கப்படவுள்ளது.”
“இவ்வுதவியானது பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 33,000 தொழிலாளர்களின் குடும்பச் சுமையினை ஓரளாவாவது குறைக்க இயலும்,” என நேற்றிரவு மின்னல் எஃப்.எம் வானொலி நிலையத்தின் நேரலைப் பேட்டியில் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் வகையில், அங்கு பணிப்புரியும் மலேசியத் தொழிலாளர்களுக்கு தற்காலிகத் தங்கும் வசதிகளை ஏற்படுத்தித்தர அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த ஏற்பாடுகளை கண்காணித்து வருவதுடன், தேவைப்படும் ஒத்துழைப்புகளையும் நாம் வழங்கி வருகின்றோம்,” என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் மேலும் கூறினார்.
தொடர்ந்துப் பேசிய டத்தோஸ்ரீ மு. சரவணன், பொதுமக்கள் எந்நேரமும் சுத்தத்தினைப் பேணுவதில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கோவிட்-19 பாதிப்புகளைக் களையும் அரசின் முயற்சிகளுக்கு, குறிப்பாக பிரதமர் அறிவித்துள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
https://www.thesentral.my/2020/03/18/tamil-dsms-kebajikanpekerja/
Add Comment