Uncategorized

இந்திய விமான நிலையங்களில் நாடு திரும்ப இயலாமல் பரிதவித்துக்கொண்டிருக்கும் மலேசியர்களுக்கு ம.இ.கா உதவிக்கரம்

கோலாலும்பூர், மார்ச் 18: கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசு மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக தடைச் செய்திருக்கும் வேளையில், இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் நாடு திரும்ப இயலாமல் பரிதவித்துக்கொண்டிருக்கும் மலேசியர்களுக்கு வேண்டிய உதவிகளை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன்  ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்விவகாரம் குறித்து சென்னையில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் இன்று அவ்விமான நிலையங்களில் மலேசியர்களைச் சந்தித்து உதவிகளை வழங்கவுள்ளனர்.

அதே வேளையில், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன், தமது தமிழக தொடர்புகளின் வாயிலாக திருச்சி விமான நிலையத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கு நிலைமை சகஜ நிலைக்கு திரும்பும் வரை தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ம.இ.கா மலேசிய மற்றும் இந்திய அரசாங்கங்களின் வாயிலாக நாடு திரும்ப இயலாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் மலேசியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை பேணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சின் உடனடி நடவடிக்கையினையும் கோரவிருக்கின்றது.