கோலாலும்பூர், மார்ச் 16: கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நாட்டில் பொது நடமாட்டத்துக்குக் கட்டுப்பாட்டு உத்தரவினை மலேசிய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
கோவிட்-19 பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி, மக்களின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும் நோக்கில் இவ்வாணை அமுலுக்கு வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ முகிதின் யாசின் ஊடகங்களின் நேரலை வாயிலாக மக்களுக்கு தெரிவித்தார்.
இந்நடவடிக்கை தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) மற்றும் காவல்துறை சட்டம் 1967 (சட்டம் 344) ஆகியவற்றின் கீழ் எடுக்கப்பட்டதாகவும், இது நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர் என அனைவரையும் உட்படுத்தும் என பிரதமர் மேலும் கூறினார்.
பிரதமர் அறிவித்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் சாராம்சங்கள் பின்வருமாறு:
- மத, விளையாட்டு, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு தடை
- வெளிநாடுகளுக்குச் செல்ல அனைத்து மலேசியர்களுக்கும் விரிவான தடை
- வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்களுக்கு சுகாதார பரிசோதனை மற்றும் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தல்
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வருகையாளர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை
- பள்ளி விடுமுறை மார்ச் 31, 2020 வரை நீட்டிப்பு
- உயர்க்கல்விக்கூடங்கள், தொழிற்பயிற்சி மையங்களின் வகுப்புகள் ஒத்திவைப்பு. நிகழ்நிலை (ஆன்லைன்) வகுப்புகளுக்கு அனுமதி
- சுகாதாரம், மருந்தகம், பாதுகாப்பு, பயன்பாடுகள் (நீர், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு), போக்குவரத்து, வங்கி, நிதித்துறை, மளிகை வியாபாரம், உணவுப் பொருட்கள் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுப்பு; வேலைகளை வீட்டில் இருந்து பார்க்கும்படி ஊக்குவித்தல்.
- வழிப்பாட்டு தளங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிப்பு துப்புரவுப் பணிகள் நிறைவேற்றுதல்
- போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து செயல்படும். வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பிரதமர் தமதுரையில் கோவிட்-19 பரவலைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரஙகள் ஊடகங்கள் வாயிலாக தீவிரமாக மேற்கொள்ளப்படும் என கூறினார். அதே வேளையில் கோவிட்-19 தொடர்பான போலி செய்திகளை பரப்புவோர்கள் மற்றும் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மலேசியாவில் கோவிட்-19 நோய் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்துள்ளது.
https://www.thesentral.my/2020/03/17/tamil-covid19malaysia-lockdown/
Add Comment