MIC News

இரத ஊர்வலத்தின் போது 10,000 பக்தர்களுக்கு அன்னதானம்! மஇகா தலைமையகம் ஏற்பாடு!

“இந்து சமயத்தின் புனிதம் காக்கும் வகையிலும், இந்திய சமூகத்தின் பண்பு நலன்களை பறைச்சாற்றும் ரீதியிலும் தைப்பூசக் கொண்டாட்டங்கள் நெறி தவறாது அனுசரிக்கப்பட வேண்டும்!”

கோலாலம்பூர், பிப்.5-

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நாளை 6.2.2020 வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில் துவங்கும் வெள்ளி இரத ஊர்வலத்தின் போது, சுமார் 10,0000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மஇகா தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

வழக்கம் போல, இவ்வாண்டும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ஜீவகாருண்ய நடவடிக்கையை, நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பதாக கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்படும் அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் அழகிய வெள்ளி இரதம், இரவு 10.00 மணியளவில் மஇகா தலைமையகக் கட்டிடத்தை வந்தடையும். எனவே, சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து, ஸ்ரீ முருகப் பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் வழங்கும் வழக்கமானது, இதர மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றது. மாநில மஇகா தொடர்புக் குழுக்கள், தத்தம் பகுதிகளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு முழு ஆதரவு தருவதோடு, அன்னதானமும் வழங்கி வருகின்றனர் என்று டத்தோ அசோஜன் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு, ஈப்போ கல்லுமலை ஆலயம், சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம், பினாங்கு தண்ணீர்மலை ஆலயம் போன்ற இன்னும் பல ஆலயங்களில் மஇகா பொறுப்பாளர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து, பக்தர்களின் பசித் தாகத்தை போக்கி வருகின்றனர் என்றார்.

இதற்கிடையில், இந்து சமயத்தின் புனிதம் காக்கும் வகையிலும், இந்திய சமூகத்தின் பண்பு நலன்களை பறைச்சாற்றும் ரீதியிலும் தைப்பூசக் கொண்டாட்டங்கள் நெறி தவறாது அனுசரிக்கப்பட வேண்டும் என்று டத்தோ அசோஜன் வலியுறுத்தினார்.

பக்தப் பெருமக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை வெற்றிக்கரமாக நிறைவேற்றி, எல்லாம் வல்ல முருகன் திருவருள் பெற, மஇகா சார்பாக டத்தோ அசோஜன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

About the author

TheVoice

Add Comment

Click here to post a comment