MIC News

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் எழுச்சிப் பெறும் ம.இ.கா

கோலாலும்பூர், டிசம்பர் 18: கடந்தாண்டு ஜூலை மாதம் மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தேசியத் தலைவராக பொறுப்பேற்றது முதல் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மேற்கொண்டுவரும் கட்சி மற்றும் சமுதாயத்தின் உருமாற்றங்கள் எழுச்சியூட்டுவையாக அமைந்துள்ளன என ம.இ.காவின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர், முன்னாள் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் சுபாங் என்.ஆர், கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

60 ஆண்டுகளாக ஆளும் அரசாங்கத்தின் உறுப்புக் கட்சியாக அதிகாரங்களோடும், அங்கீகாரங்களோடும் ம.இ.கா விளங்கியது, 14-வது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்கு பின்னர் எதிர்க்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் இன்றளவும் அதன் சமுதாயச் சேவைகள் தொடர்கின்றன. பல சீரிய, புத்தாக்க சிந்தனைகளுடன் புத்தெழுச்சியுடன் ம.இ.கா திகழ்கின்றது. இம்மாற்றமே டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைகின்றது.

கட்சி சீரமைப்பு

ம.இ.கா எதிர்க்கட்சியாக திகழினும், அதன் கட்டமைப்பு சரியவில்லை. இன்றளவும் புதிய உறுப்பினர்களுடன், புதிய கிளைகள் நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது சமுதாயம் கட்சி தலைமைத்துவத்தின்பால் கொண்டிருக்கும் நம்பிக்கையினையும், எதிர்ப்பார்ப்பினையும் புலப்படுத்துகின்றது.

டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில், கிளை, தொகுதி, மாநிலம், தேசியம், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி என அனைத்து கட்சியின் கட்டமைப்புகளும் சீரமைக்கப்பட்டுள்ளன; அனைத்து பகுதிகளும் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்றிட முழு சுதந்திரமும் வழங்கப்படுள்ளன.

தேசிய முன்னணியின் அங்கீகாரம்

இதுகால் வரை தேசிய முன்னணியில் வெறும் உறுப்பிய அந்தஸ்தினைப் பெற்று, அதன் முடிவுகளுக்கு செவி சாய்க்கும் கட்சியாக மட்டுமே ம.இ.கா விளங்கி வந்தது. ஆனால் இன்றோ, அம்னோவிற்கு இணையாக ம.இ.காவும் ம.சீ.சவும் சம உரிமையினைப் பெற்றுள்ளன. இந்த அங்கீகாரத்திற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் ஆளுமைத் திறனே காரணம் என்பது வெள்ளிடைமலை.

பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு

14-வது பொதுதேர்தலுக்கு பின்னர் ம.இ.கா அதன் அரசியல் நோக்கினையும், வியூகங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வகையில், இதுகால் வரை அரசியல் எதிரியாகவும், மதவாத கட்சியாகவும் பார்க்கப்பட்ட பாஸ் கட்சியுடன் சந்திப்புகளும், கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. சந்தேகத் திரைகள் விலக்கப்பட்டன. நல்லுறவும், ஒத்துழைப்பும் உருவாக்கம் கண்டன. இது அரசியல் ரீதியாக ம.இ.காவிற்கு பலனையும், பலத்தினையும் வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.  டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தான் ஒரு அரசியல் சாணக்கியன் என்பதனை நிரூபணம் செய்துள்ளார்.

இந்திய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு

சிதறுண்டுக் கொண்டிருந்த மலேசிய இந்திய அரசியல் இயக்கங்களை ஒரு சேர்க்கும் முயற்சியினையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கொள்கைகள் மாறுப்பட்டிருப்பினும், சமுதாய நலன் கருதி  அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். பிற இந்திய அரசியல் கட்சிகளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்தின் மேல் நம்பிக்கைக்கொண்டு ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.

கட்சி சொத்துகள் மீட்பு

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ம.இ.கா எனும் மாபெரும் இயக்கம் தொண்டர்களின் உழைப்பு மற்றும் தியாகங்கள் வாயிலாக உருவாக்கப்பட்டு வளர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் நாடு முழுமையும் கட்சியினை பலப்படுத்தும் நோக்கில பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்டன. தலைமைத்துவ மாற்றங்கள் நிகழும் தருணங்களில் கட்சியின் சொத்துகள் பற்றிய விவரங்கள் காலப்போக்கில் மறைக்கப்பட்டன, மறக்கப்பட்டன. தொண்டர்களின் நன்கொடைகள், அயரா முயற்சிகளில் உருவான டேப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனம் போன்றவைகளோ தனி நிர்வாகங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு கட்சிக்கு அப்பாற்பட்டே விளங்கின.

இவை அனைத்துமே ம.இ.காவின் சொத்துகள், சமுதாயத்தின் அடையாளங்கள் என்பதனை கருத்தில் கொண்டு, ம.இ.கா எனும் ஸ்தாபனம் பிறர் தயவின்றி தொடர்ந்து செயலாற்றிட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்து சொத்துகளையும் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மீட்டுள்ளார். புரியாத புதிராக இருந்த ம.இ.கா தலைமையகத்தினை ஒட்டியிருந்த நிலமும் மீண்டும் கட்சியின் வசம் வந்தடைந்துள்ளது. டான்ஸ்ரீ அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை பறைசாற்றும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

சாதி அரசியல் ஒழிப்பு

குறுகிய அரசியல் இலாபத்திற்காகவும், தனிநபர் சுயநலத்திற்காகவும் ம.இ.காவில் அவ்வப்போது சாதி எனும் பிணி பற்றிக்கொள்ளும் என்பதனை யாருமே மறுக்க இயலாது. தமது தலைமைத்துவத்தின் கீழ் சாதி பிரிவினைகளையும், அரசியலையும் அனுமதிக்கப் போவதில்லை என சூளுரைத்துள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதனை தம் செயல்களிலும் பிரதிப்பலிக்கின்றார். சாதி எனும் பிணி அகன்று, சமுதாயம் மேன்மைப் பெற வேண்டும் எனும் அன்னாரின் அரிய சிந்தனை மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்றது.

எழுச்சிப் பெறட்டும் ம.இ.கா

பாக்காத்தான் அரசின் கீழ் மக்கள், குறிப்பாக இந்திய சமுதாயம் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் வேளையில், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தலைமையில் ம.இ.கா மீண்டும் மக்களின் நம்பிக்கையினைப் பெற்று வருகின்றது. அன்னாரின் தலைமைத்துவத்தில் ம.இ.கா தொடர்ந்து மீட்சிப்பெற்று, சமுதாயத்தின் குரலாகவும் காவலனாகவும் என்றென்றும் திகழும் என்பது திண்ணம் என சுபாங் கிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

POSTED BY: VASUDEVAN KRISHNASAMY DECEMBER 18, 2019