குறிப்பிட்ட ஒரு சமூக அரசியல் தலைவர்களிடம் முழு அதிகாரம் இருக்கும் பட்சத்தில், இங்கு எந்த ஒரு மாற்றமும் சமூதாயத்திற்கு வராது. அரசியல் லாபத்திற்காக அரசியல்வாதிகள் அள்ளிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் கையில் எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரம் முழுவதும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்களிடம்தான் உள்ளது என ஹிண்ட்ராப் போராட்டத்தின் 12-வது ஆண்டு நினைவு நாளையோட்டி, பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடத்தப்பட்ட கூட்டத்திற்குப் பிறகு உதயகுமார் இத்தகவலைத் தெரிவித்தார்.
அதிகாரம் உள்ள முக்கியப் பதவிகளை குறிப்பிட்ட ஒரு சமூக அரசியல்வாதி வைத்துக்கொண்டு, எளிமையாகத் தீர்க்கவேண்டிய பிரச்னைகளை இழுத்தடுக்கின்றனர்.
குறிப்பாக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாங்கத்தால் செய்ய முடியும். ஆனால், முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ள தலைவர் மனது வைக்கவில்லை. அதிகாரமே இல்லாத 4 அமைச்சர்கள் இருந்தால் என்ன… இல்லையென்றால் என்ன? நமக்குத் தலைவர்கள் என்றால் அதிகாரம் உள்ள அமைச்சர்கள்தான். அது இந்திய அமைச்சர்கள் இல்லை. அவர்கள் வெறும் மண்டோர்கள். அவர்களைக் கேட்டால் கிடைக்காது என உதயகுமார் கூறினார்.
அரசியலை நடத்த சில கண்துடைப்பு வேலைகளைச் செய்யும் மண்டோர்கள் அவர்கள. நடமுறை வார்த்தையில் சொல்லணும் என்றால், அரசியலுக்காக இந்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்லாரும் ‘வாயாங்’ கட்டுகின்றனர். அங்கு எந்த ஒரு அதிகாரமும் அவர்களிடம் இல்லை. மித்ரா எல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. அவர்கள் வழங்கும் பயிற்சி நிரந்தரமானதா? தொடர்ச்சியாக எவ்வளவு காலம் நடக்கும்? இந்த 100 மில்லியன் அடிமட்ட மக்களைப் போய்ச் சேர்ந்ததா? தொடர்ச்சியாக உதவி கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்குத் துல்லியமான பதில் அவர்களிடம் இல்லை காரணம் அவர்களிடம் அதிகாரம் இல்லை. சும்மா மௌனமாக இருக்கிறார்கள், மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு. அவர் செய்வார் என்று நம்பி மக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது அந்த அதிகாரம் உள்ள தலைவர்கள் மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும் சூழல். அதனால் மக்கள் இவர்களை வறுத்தெடுக்கின்றனர்.
இவர்களும் சாணக்கியத் தனமாக நடந்துகொள்ளாமல் பயிற்சி நடத்துவதில் கிடைத்துள்ள பணத்தை வைத்து, சமுதாயத்திற்கு செய்கின்றோம் எனப் பாவலா காட்டுகின்றனர்.
இவர்களுக்கு ம.இ.கா எவ்வளவோ பரவாயில்லை. இப்போது நான்கு அமைச்சர்கள். அப்போது துன் சாமிவேலு மட்டும்தான் அமைச்சர். அதிகாரம் உள்ள அதே தலைவர் கீழ்தான் சாமிவேலும் கடமையாற்றினார். இவர்களை விட கடமையைச் சற்றுச் சரியாகச் செய்துள்ளார், நிரந்தரத் தீர்வை நோக்கி.
அவர் எழுப்பிய ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ,தேஃப் கல்லூரி எம் .ஐ.இ.டி கடன் உதவித் திட்டம் இவை அனைத்தும் ம.இ.காவின் சொந்த அதிகாரத்தில் உள்ளது. நிரந்தரமாக அதிகாரத்தில் உள்ள தலைவர் மனது வைத்து, பட்ஜெட் மானியம் வழங்கினால் மட்டுமே நடத்தமுடியும் என்ற சூழல் இல்லை. இப்படிப்பட்ட நிரந்தர அல்லது தொடர்ச்சியாக சமுதாயம் பயன் அடையக்கூடிய திட்டத்தை சாமிவேலு, அதிகாரம் இல்லாத ஒரே ஒரு அமைச்சராக இருந்து சுதாரித்துக்கொண்டு சமுதாயத்திற்கு பங்காற்றினார் என உதயகுமார் தெரிவித்தார்.
ஆனால், அதிகாரம் உள்ள காலகட்டத்தில் மனது வைக்காத தலைவர், எப்படி ஒட்டுமொத்த பழியை சாமிவேலுவிடம் திணித்து தாப்பித்துக்கொண்டு, சாமிவேலுவைப் பலிகடா ஆக்கினாரோ, அப்படி அவரின் அடுத்த பலியாடு பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி என உதயகுமார் தெரிவித்தார்!
(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் நவம்பர்-24