கோலாலம்பூர் | பிப்பரவரி 22:-
பிப்ரவரி 22 முதல் தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளில் அமரவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல போராட்டங்கள், பிரச்சனைகள் கடந்து எஸ்பிஎம் மாணவர்கள் இன்றைய தேர்வுகளில் அமர்கிறார்கள் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வு மூன்று மாதங்கள் ஒத்தி வைக்ககப்பட்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கும், சோர்வுக்கும் ஆளாகினர்.
நேரடியாக பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்க முடியாத சூழல் இன்னொரு புறம். இயங்கலை எனப்படும் ஒன்லைன் வகுப்புகள் மூலம் கற்க வேண்டிய இக்கட்டான சூழல். பள்ளி வகுப்புகளுக்கு செல்ல முடியாமலும், டியூசன் போன்ற தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் கூட செல்ல முடியாத நெருக்கடி.
இப்படியாக பல சவால்களைக் கடந்து தேர்வுகளுக்கு அமரும் மாணவர்கள் உற்சாகம் குறையாமல் தங்களால் இயன்ற உழைப்பையும், முயற்சியையும் இந்தத் தேர்வுகளில் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்திய மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக் கழகங்களுக்கு செல்வதற்கும், எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன்ஸ், “ஏ லெவல்” போன்ற அடுத்த கட்டப் படிப்புகளில் நுழைவதற்கும் இந்த எஸ்பிஎம் தேர்வு மிகவும் முக்கியமாகும்.
எனவே, அனைவரும் உங்களின் கவனத்தைச் செலுத்தி, உங்களால் இயன்ற உழைப்பையும், முயற்சியையும் வழங்கி சிறந்த முறையில் எஸ்பிஎம் தேர்வுகளில் தேர்ச்சி பெறுங்கள்.
அதன் பின்னர் உங்களின் எதிர்காலத்தை மஇகா கவனித்துக் கொள்ளும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே கல்வித் துறையில் இந்தியர்கள் உயர்வதன் மூலமே நமது சமூகம் முன்னேற்றம் காணும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மஇகா பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இன்றைக்கு நமது இந்திய மாணவர்களுக்கென கல்விப் புகலிடமாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தையும் டேஃப் கல்லூரி போன்ற தொழில் திறன் பயிற்சிக் கல்லூரிகளையும் நடத்தி வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல், வசதி குறைந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு எம்ஐஇடி மூலம் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை கல்வி நிதியாகவும், கல்விக் கடனாகவும் வழங்கி வருகிறோம்.
மத்திய அரசாங்கத்தில் இணைந்திருக்கிற காரணத்தால், அரசாங்கப் பொதுப் பல்கலைக் கழகங்களிலும், மெட்ரிகுலேஷன்ஸ் வகுப்புகளிலும் நமது இந்திய மாணவர்களுக்குரிய உரிமையை, இடங்களைப் பெறுவதற்கும் நாங்கள் பெருமுயற்சி செய்து வருகிறோம்.
எனவே, அனைத்து இந்திய மாணவர்களும் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படாமல் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதுங்கள். சிறந்த முறையில் தேர்ச்சி பெறுங்கள். மற்ற எல்லாவற்றையும் மஇகா மூலம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.
உங்களின் தேர்ச்சித் தகுதிகளுக்கேற்ப உங்களுக்குரிய பல்கலைக் கழக, மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் கிடைப்பதை அரசாங்கத்தின் மூலம் நாங்கள் உறுதி செய்வோம்.
ஏய்ம்ஸ் பல்கலைக் கழகம்,டேஃப் கல்லூரிய போன்ற மஇகா கல்வி நிலையங்களின் வழி உங்களின் கல்வியைத் தொடரவும் நாங்கள் பாதை அமைத்துத் தருகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நிதிப் பற்றாக் குறையால் எந்த ஓர் இந்திய மாணவனும் தனது கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும் வண்ணம், அதற்கான நிதி உதவிகளையும் எம்ஐஇடி மூலமும், மற்ற அமைப்புகளின் மூலமும் மஇகா தொடர்ந்து செய்து வரும்.
எனவே, தொய்வடையாமல், எதிர்காலக் கல்வி குறித்த கவலை கொள்ளாமல், உற்சாகத்துடன், தைரியத்துடன் எஸ்பிஎம் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதுங்கள் என இந்திய மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் எதிர்காலக் கல்விக்கான பாதுகாவலனாக, வழிகாட்டியாக மஇகா செயல்படும் என்ற உறுதி மொழியை வழங்குகிறேன்.
நம்பிக்கையோடு தேர்வுகளை எழுதுங்கள். சிறந்த தேர்ச்சிகளைப் பெறுங்கள்.
எனது நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
Add Comment