புத்ராஜெயா, மார்ச் 28: கோவிட்-19 நோய்ப்பரவலினைத் தொடர்ந்து இந்திய அரசு விதித்த விமானப் பயணத்தடை உத்தரவின் காரணமாக நாடு திரும்ப இயலாமல் அங்கு சிக்கியுள்ள மேலும் 1988 மலேசியர்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான 12 விமானப் பயணங்களின் செலவினை ம.இ.கா ஏற்கின்றது என ம.இ.கா தேசியத் துணைத்தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று அறிவித்தார்.
““இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப இயலாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல. முதலில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 1106 மலேசியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்புவதற்கான 6 ஏர் ஆசியா விமானச் சேவைகளின் செலவினையும், 270 மலேசியர்கள் வங்காளத்தேசத்திலிருந்து திரும்ப மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவை செலவினையும் ம.இ.கா ஏற்றுக்கொண்டது.”
“இருப்பினும், தற்போது கிடைத்துள்ள அண்மைத் தகவல்களின் படி மேலும் 1988 மலேசியர்கள் இந்தியாவில் சிக்கியுள்ளதை அறிகிறோம். சென்னை, திருச்சி, மும்பாய், டெல்லி, அம்ரித்சார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து 12 மலிண்டோ விமானங்கள் வாயிலாக அவர்களை மீட்டு வர ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இசைந்துள்ளார்,” என டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
“வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடீன் ஹுசேன் மற்றும் விஸ்மா புத்ரா இவ்விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கான சிறப்பு அனுமதியைப் பெற தீவிர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் கட்டம் கட்டமாக அனைத்து மலேசியர்களும் மீட்கப்படுவர். டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.கா தார்மீகப் பொறுப்புடன் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு துணைப்புரிந்துள்ள டத்தோஸ்ரீ ஹிஷாமுடீன் ஹுசேன் மற்றும் வர்த்தகக் குழுமங்களுக்கும் எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
https://www.thesentral.my/2020/03/28/tamil-mic-12flights-strandedmalaysians/
Add Comment