


‘3-ஆர்’ சட்ட அமலாக்கம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்:
-தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
இஸ்லாம் சமய பிரச்சாரகர்களும் வெறுப்பு பேச்சாளர்களுமான ஸம்ரி வினோத், ஃபிர்தாவுஸ் வோங் ஆகியோரின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது குறித்து மஇகா கொந்தளித்துள்ளது. இனம் மதம் அரசர் சம்பந்தப்பட்ட ‘மூன்று ஆர்’ சட்டம் ஒரு மதத்தின் புனிதத்தை மட்டும் காப்பதற்கான சட்டக் கருவி அல்ல என்று மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமய நல்லிணக்கம், பொது ஒழுங்கு, இனங்களுக்கு இடையே ஒற்றுமை ஆகியவற்றை நிலைநாட்டத்தான் ‘3-ஆர்’ சட்டம் என்பதை மஇகா நினைவுபடுத்த விரும்புகிறது.
“சில பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து அவற்றை கடந்து செல்வதோ அல்லது ஆறப் போடுவதோ நடுநிலைமை ஆகாது; இது ஒரு வகையில் புறக்கணிப்பாகும்”
இன்றைய மலேசியாவில் உண்மையிலேயே ‘3-ஆர்’ சட்டம் நடைமுறையில் இருந்தால், அது, எல்லா சமயங்களுக்கும் நியாயமாகவும் உறுதியாகவும் பக்கசார்பின்றியும் பொதுவான அளவுகோலுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
போதுமான ஆதாரம் எதுவும் இல்லாததால் ஸம்ரி வினோத் மற்றும் ஃபிர்தௌஸ் ஓங் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்திருப்பதாக பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் தெரிவித்திருந்த நிலையில் விக்னேஸ்வரன் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் துறை அனுப்பிய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் இந்த முடிவை எடுத்ததாக அஸாலினா மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த இருவர் மீதான நடவடிக்கை குறித்து ஜெலுத்தோங் உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அஸாலினா ஓத்மான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரத்தை தெரிவித்திருந்தார்.
ஒரு சமயத்தினர் அல்லது இனத்தினர் பாதிக்கப்படுகின்ற நிலையில் மூன்று ஆர் சட்டம் குறித்து இத்தகைய இரட்டை நிலை எடுத்திருப்பது மிகவும் ஆபத்தானது; ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல இன, பல சமய, பல மொழி பேசும் மக்களைக் கொண்ட கூட்டு சமுதாயத்தில் இப்படிப்பட்ட பக்க சார்பான சட்ட அமலாக்கம் அரசியல் சாசனம் எட்டாம் பிரிவுக்கு முரணானது. தவிர சட்டம் அமலாக்கம் மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையும் சிதையும்.
கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் குறித்து ஸம்ரி வினோத் ஆலய குழுவினர் நிலத்தை அபகரித்ததாக தெரிவித்திருந்தார்; அதற்கும் முன்னதாக தைப்பூசத்தின் பொழுது காவடி சுமந்து வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் மது அருந்தியவர்களைப் போல ஆடுகின்றனர் என்று சமயத்தையும் வழிபாட்டு முறையையும் பழித்திருந்தார். இதன் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
இத்தனை புகார்கள் செய்யப்பட்டிருந்தும் ஆதாரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்திருப்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.