Mi-Voice MIC News

பத்திரிகை அறிக்கை
மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர்
தான்ஸ்ரீ ஜி.ராஜூ அவர்களின் மறைவை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி

மஇகாவில் நீண்ட காலம் சேவையாற்றியவரும் குறிப்பாக மஇகா பேராக் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவருமான தான்ஸ்ரீ ஜி.ராஜூ அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து நான் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எல்லாக் காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர் தான்ஸ்ரீ ஜி.ராஜூ என்பதை என்றும் நான் நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
மஇகாவின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வழங்கி வந்திருக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். அதிலும் குறிப்பாக பேராக் மாநிலத்தில் மஇகா  அரசியலில் தீவிரம் காட்டியவர்களில் பெரும்பாலோர் தமிழாசிரியர்கள் ஆவர். அந்த வரிசையில் நீண்ட காலமாக தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, மாநில செயலாளராகவும் பின்னர் மாநிலத் தலைவராகவும் சிறந்த சேவைகளை வழங்கியவர் தான்ஸ்ரீ ஜி.ராஜூ.
1990 முதல் 2008 வரை பேராக் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராகவும், அதே காலகட்டத்தில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ராஜூ அவர்கள். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) அவர் பதவி வகித்திருக்கிறார்.
தன் பதவிக் காலத்தில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதிக்கும் பேராக் மாநில இந்திய சமூகத்திற்கும், மஇகா பேராக் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ராஜூ அவர்கள் அளப்பரிய சேவைகளை வழங்கியிருக்கிறார்.
ராஜூ அவர்களின் சேவைகள் என்றும் மஇகாவினரால் நினைவுகூரப்படும். போற்றப்படும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
26 மே 2024

About the author

Editor

Add Comment

Click here to post a comment