சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகிய இருவருக்கும் எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பியதற்காக அவர் மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு அண்மையில் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அவதூறு கூறிய தயாளன் ஶ்ரீபாலன் 95 ஆயிரம் ரிங்கிட் தொகையை இழப்பீடாக விக்னேஸ்வரன் – சரவணன் இருவருக்கும் வழங்க வேண்டுமென ஆணையிட்டார்.
இந்த வழக்கில் விக்னேஸ்வரன் – சரவணன் இருவரின் சார்பிலும் வாஸ் அண்ட் கோ வழக்கறிஞர் நிறுவனம் பிரதிநிதித்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் விஷால் யோகரத்தினம் நீதிமன்றத்தில் வாதாடினார்.
கோவிட்-19 பாதிப்புகள் காரணமாக இயங்கலை வழியாக நடத்தப்பட்ட இந்த வழக்கு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் நீதிபதி டத்தோ அகமட் பின் பாச்சே தனது தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கு தொடரப்பட்டது முதல் பிரதிவாதியான தயாளன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யாரையும் தனது சார்பாக வாதாட நியமிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தற்காப்பு வாதம் இல்லாத நிலையில் இந்தத் தீர்ப்பு (default judgment) விக்னேஸ்வரன்-சரவணன் ஆகியோருக்குச் சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் யாரையும் தயாளன் ஶ்ரீபாலன் தன்னைப் பிரதிநிதிக்க நியமிக்கவில்லை என்றாலும், தன்மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதை காணொலி ஒன்றின் மூலம் அவர் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.
மேலும் பிரதிவாதியான தயாளன் ஶ்ரீபாலன் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளைக் கூறாமல் இருக்க நிரந்தரத் தடையாணை ஒன்றையும் நீதிபதி இன்று பிறப்பித்தார். இந்தத் தடையாணையின் மூலம் தயாளன் ஶ்ரீபாலன் மேற்கொண்டு இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப முடியாது என்பதோடு ஏற்கனவே செய்திருக்கும் அனைத்து அவதூறுகளையும் சமூக ஊடகத் தளங்களில் இருந்து அகற்றவும் வேண்டும்.
இன்றையத் தீர்ப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்டிருக்கும் தடையாணையின் நிபந்தனைகளை தயாளன் ஶ்ரீபாலன் மீறினால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கும் வாதிகளான விக்னேஸ்வரன்-சரவணன் இருவருக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இன்று வழங்கப்பட்டத் தீர்ப்பை செயல்படுத்த அனுமதியையும் வாதிகளான விக்னேஸ்வரன்-சரவணன் இருவருக்கும் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
விக்னேஸ்வரன்-சரவணனுக்கு எதிராக அவதூறு பரப்பிய இரண்டு காணொலிகளை (வீடியோ) வெளியிட்டதன் அடிப்படையில் தயாளன் ஶ்ரீபாலன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த காணொலிகளில் கூறப்பட்டவை பொய்யானவை, அவர்கள் இருவரின் தோற்றத்தையும், கௌரவத்தையும் வேண்டுமென்றே பாதிக்கச் செய்யும் உள்ளடக்கத்தைக் கொண்டவை இந்தக் காணொலிகள் என்பதாலும் இந்த வழக்கு தொடரப்பட்டது.
Add Comment