துன் சம்பந்தனார் நினைவு நாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
நமது நாட்டில் மலேசிய இந்தியர்களாகிய நாம் இன்று ஓரளவுக்கு மேம்பாடு அடைந்த சமூகமாக, செல்வச் செழிப்புடன், அரசியல் உரிமைகள், சலுகைகளுடன் வாழ்கிறோம் என்றால் அதற்காகப் பாடுபட்ட, தியாகங்கள் பல செய்த நமது கடந்த காலத் தலைவர்களை என்றும் எப்போதும் மறந்து விடக் கூடாது.
நன்றியுடன் நினைவு கூர வேண்டும். அவர்களின் பணிகளையும், உழைப்பையும் போற்ற வேண்டும்.
அந்தவகையில் மஇகாவின் 4-வது தேசியத்தலைவராக பல ஆண்டுகள் கட்சியை சிறப்புடன் வழிநடத்தியவர் என்ற முறையிலும், நமது நாடு சுதந்திரம் பெற பாடுபட்டவர் என்ற முறையிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நமது இந்திய சமூகமும் பல உரிமைகளைப் பெறப் பணியாற்றிவர் என்ற முறையிலும் அமரர் துன் சம்பந்தனார் அவர்கள் மலேசிய வரலாற்றில் தனியிடம் பெற்றிருப்பவர்.
இன்று அன்னாரின் நினைவு நாளை (மே 18) முன்னிட்டு அவரின் சேவைகளை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்று நாட்டிலேயே மிகப் பெரிய கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தைப் பொருத்தமான நேரத்தில் தோற்றுவித்து, மக்களின் சொத்தாக இன்று அதனை விட்டுச் சென்றிருக்கிறார் துன் சம்பந்தனார். ஊர் ஊராகச் சென்று பத்துப் பத்து வெள்ளியாக அவர் சிறுகச் சிறுகச் சேர்த்து, தனது அயராத உழைப்பால் அவர் உருவாக்கிய கூட்டுறவு சங்கம் என்றுமே அவர் பெயரைச் சொல்லும்.
மக்கள் சேவையாளர்கள், தன்னலம் கருதாது சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் என்றுமே மறக்கப்படமாட்டார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் துன் சம்பந்தனார் அவர்கள்.
அவரின் பாதையில் இன்றைய மஇகா தலைவர்களும் தன்னலம் கருதாது சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு பாடுபட்டால் வருங்காலத்தில் அத்தகைய தலைவர்கள் மக்கள் ஆதரவால் உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்பதோடு, மக்களால் என்றுமே நினைவுகூரப்படுவார்கள்.
துன் சம்பந்தனாரின் அரும் பணிகளைப் போன்று அவரின் பாதையில் இந்திய சமுதாயத்திற்கும் நமது கட்சிக்கும் நமது சேவைகளையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருவோம்.
Add Comment