Mi-Voice MIC News

துன் சாமிவேலுவின் சாதனைகளை விக்னேஸ்வரன் தொடர்கிறார்

இன்று துன் சாமிவேலுவின் பிறந்த நாள். மலேசிய அரசியலில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க சாதனைகளையும், சேவைகளையும் வழங்கி வந்திருப்பவர் அவர்.

1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிவேலு தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை புரிந்தவர்.

மஇகாவில் பல்வேறு பதவிகளை வகித்து கட்டம் கட்டமாக தனக்கென ஆதரவுத் தளத்தை வளர்த்துக்கொண்டார்.

அவரின் போராட்ட குணமும் துணிச்சலும் அனைவரும் அறிந்தது. இந்தோனிசியாவுக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில் தேசிய முன்னணியினரோடு 1965-ஆம் ஆண்டு வாக்கில் குதித்தவர் சாமிவேலு. அப்போது கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனிசியக் கொடியைக் கீழிறக்கிய அவரின் துணிச்சல் பலராலும் எப்போதும் நினைவுகூரப்பட்டது.

கட்சியிலும் தனக்கு எதிராக அரசியல் வியூகங்கள் வடிவமைக்கப்பட்ட போதும், அதனைத் தனிமனிதனாக கடுமையாக எதிர்த்துப் போராடி, அந்த எதிர்ப்பலைகளில் நீந்தி வெற்றி பெற்றவர் அவர்.

கடந்த 1979-ஆம் ஆண்டில் மஇகாவின் 6-வது தேசியத் தலைவராகப் பதவியேற்றார் துன் சாமிவேலு. டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் அகால மரணத்தால் அப்போது மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த சாமிவேலு இடைக்காலத் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கால ஓட்டத்தில் 4 பிரதமர்களின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக நீடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியவராக சாமிவேலு திகழ்கிறார்.

பொதுப் பணி அமைச்சுப் பொறுப்புக்குப் பின்னர் சில ஆண்டுகள் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் பதவி வகித்தார். மஇகா தலைவர் பொறுப்பிலிருந்தும், அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகிய பின்னரும் அவரை தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக அமைச்சர் அந்தஸ்துடன் நியமித்தது மலேசிய அரசாங்கம்.

அவரின் கடந்த கால சேவைகள், அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் புதிய பொறுப்பு அவருக்காகவே உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதிலும் சிறப்பாகப் பணியாற்றித் தனது தனித்துவ முத்திரையைப் பதித்தார் சாமிவேலு.

அமைச்சராக சாதனைகள்

பொதுப்பணி அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் நாட்டின் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் அப்போதைய பிரதமர் துன் மகாதீரின் வியூகங்களையும், திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் சாமிவேலு.

பல நெடுஞ்சாலைத் திட்டங்கள், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, பினாங்கு பாலம் போன்றவை சாமிவேலுவின் மேற்பார்வையில் கட்டப்பட்டவை.

அதற்காக, உலக மாமனிதர் என்ற பட்டத்தையும் அனைத்துலக அரங்கில் பெற்றவர் சாமிவேலு.

அமைச்சுப் பொறுப்பு இல்லாத நாடாளுமன்ற பின்இருக்கை உறுப்பினராக செயல்பட்டபோதும், துணையமைச்சராகவும் அமைச்சராகவும் செயல்பட்டபோதும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளை நேரடியாக எதிர்கொண்டவர் சாமிவேலு. எந்த சூழ்நிலையானாலும், எந்தக் கேள்வியானாலும் அதனைத் தனது பேச்சுத் திறனாலும், வாதத் திறமையாலும் எதிர்கொண்டு முறியடித்தவர்.

பின்இருக்கை உறுப்பினராக செயல்பட்டபோதும், துணையமைச்சராகவும் அமைச்சராகவும் செயல்பட்டபோதும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளை நேரடியாக எதிர்கொண்டவர் சாமிவேலு. எந்த சூழ்நிலையானாலும், எந்தக் கேள்வியானாலும் அதனைத் தனது பேச்சுத் திறனாலும், வாதத் திறமையாலும் எதிர்கொண்டு முறியடித்தவர்.

இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்

மலேசிய இந்திய சமூகத்தின் தானைத் தலைவராகச் செயல்பட்ட சாமிவேலு, கல்வி மேம்பாட்டின் மூலமே இந்திய சமூகம் வலிமை பெறும், வளர்ச்சி பெறும் என்பதை வலியுறுத்தி வந்தார்.

அதற்கேற்ப, பெட்டாலிங் ஜெயாவில் இயங்கி வந்த வாண்டோ கல்லூரியை வாங்கினார். ஏற்கனவே, மஇகா உரிமை கொண்டிருந்த டேஃப் கல்லூரியை உருமாற்றி அமைத்தார்.

எம்.ஐ.இ.டி என்ற கல்வி அறவாரியத்தை உருவாக்கினார். அதன் மூலம் இன்று வரை மில்லியன் கணக்கான ரிங்கிட் வசதி குறைந்த மாணவர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலகத்திலேயே தமிழர்களுக்காக, தமிழர்கள் முன்னின்று உருவாக்கிய முதல் பல்கலைக்கழகமான ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தையும் சாமிவேலு நிர்மாணித்தார்.

இன்று அந்தப் பல்கலைக் கழகம் மீதான அனைத்துக் கடன்களும் முழுமையாகச் செலுத்தப்பட்டு, சிறந்த முறையில் இயங்கி வருகிறது.

இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்திலிருந்து உருவாகி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

குறிப்பாக இதுவரையில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்று நாடளாவிய நிலையில் பணியாற்றி வருவதற்கும் ஏய்ம்ஸ்ட் வழி வகுத்துள்ளது.

கேபிஜே என்ற கூட்டுறவுக் கழகத்தை நிறுவி நாட்டின் பல பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்களையும், நில மேம்பாட்டுத் திட்டங்களையும் உருவாக்கியவர் சாமிவேலு.

மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்வித் தேவைக்கான கூட்டுறவுக் கழகமாக கோப் டிடெக் என்ற அமைப்பையும் உருவாக்கினார் சாமிவேலு.

மஇகாவைக் கட்டுக் கோப்பாக வழிநடத்தியவர்

கடந்த ஆண்டு (2020) சாமிவேலவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது…

எத்தனையோ பிரச்சனைகள், சவால்களுக்கு இடையிலும் மஇகா தேசியத் தலைவராக, கட்சியை வலிமையோடும், கட்டுக் கோப்புடனும் திறம்பட வழிநடத்தியவர் சாமிவேலு.

எதிர்க்கட்சிகள் பெருகிய போதிலும்,இந்தியர்கள் பலர் எதிர்க்கட்சிகளில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தபோதும், மஇகாவைத் தொடர்ந்து சிறந்த கட்டமைப்பைக் கொண்ட கட்சியாக, தொகுதி ரீதியாக வளர்த்தெடுத்ததில் சாமிவேலு முக்கியப் பங்காற்றினார்.

சாதாரண மக்களோடும், அடிமட்ட உறுப்பினர்களோடும் எப்போதும் தொடர்பில் இருந்த தலைவர் சாமிவேலு.

சாதாரணத் தொண்டனின் இல்லத் திருமணமானாலும் சரி, அவனுக்கோ அவன் குடும்பத்துக்கோ அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தாலோ சரி,  அதில் நேரடியாகக் கலந்து கொண்டு நலம் விசாரிக்கும் பண்பு கொண்டவர்.

அதே போல எங்கு பிரச்சனைகள் நேர்ந்தாலும் அதை அங்கேயே சென்று எதிர்கொண்டு தீர்த்து வைக்கும் துணிச்சலான தலைமைத்துவப் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது.

உதாரணமாக, கம்போங் காந்தி வட்டாரத்தில் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோது அங்கு நேரடியாக சென்று பல நாட்கள் அந்த மக்களுடனேயே கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தவர் சாமிவேலு.

தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பு வழங்கியவர்

தனது பதவிக் காலத்தில் தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கு பல்வேறு முனைகளில் நிதி உதவிகளையும், பங்களிப்பையும் வழங்கியவர் சாமிவேலு.

நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளில் கலந்து கொண்டு கணிசமான நிதியைத் திரட்டிக் கொடுத்தவர்.

சாமிவேலுவுக்கே இருந்த தமிழ் ஆர்வமும் பற்றும் அனைவரும் அறிந்ததுதான். அதன் காரணமாக, தமிழ் இலக்கியப் பணிகளுக்கு வாரி வழங்கினார்.

மலேசியாவில் இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை தலைமையேற்று நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் சாமிவேலு.

மறைந்த கலைஞர் கருணாநிதி மலேசியாவுக்கு மேற்கொண்ட ஒரே வருகை, சாமிவேலு தலைமைத்துவத்தில் 1987-இல் கோலாலம்பூரில் நடந்தேறிய 6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையும் கோலாலம்பூரில் 2015-இல் சாமிவேலுவே தலைமையேற்று நடத்திக் காட்டினார்.

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்

நமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும், மேம்பாடுகள் காணவும் பல முனைகளிலும் தீவிரமாகப் பாடுபட்டவர் சாமிவேலு.

பல தமிழ்ப் பள்ளிகள் அவரின் உதவியால் சீரமைக்கப்பட்டன. இடம் மாற்றம் கண்டன. புதிய கட்டடத் தொகுதிகளைப் பெற்றன.

சாமிவேலுவின் சாதனைகளைத் தொடரும் மஇகா தலைமைத்துவம்

இன்று மஇகாவின் தேசியத் தலைவராகப் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும், துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ சரவணனும் இளம் வயது முதல் நீண்ட காலமாக சாமிவேலுவின் அரசியல் பாசறையில் பயிற்சி பெற்று வார்த்தெடுக்கப்பட்டவர்கள்.

விக்னேஸ்வரன் சாமிவேலுவைத் தொடர்ந்து எம்ஐஇடியின் தலைவராகவும், அதன்வழி ஏய்ம்ஸ் பல்கலைக் கழகத்தின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார்.

சாமிவேலுவின் கல்வி நோக்கங்கள், மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்குதல் போன்ற அம்சங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

துன் சாமிவேலுவுடன் கட்டுரையாளர் எல்.சிவசுப்பிரமணியம்

மஇகாவை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதிலும் தன்னிறைவு கொண்ட அரசியல் இயக்கமாக உருமாற்றுவதிலும் விக்னேஸ்வரன் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சாமிவேலு நீண்டகாலமாகத் தற்காத்து வந்த சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா மூலம் மீண்டும் கைப்பற்றுவதிலும் முனைப்பு காட்டி, கடுமையாகப் பாடுபட்டு வருகிறார் விக்னேஸ்வரன்.

சாமிவேலு விட்டுச் சென்ற பணிகளை, அவரின் தலைமைத்துவத் சாதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விக்னேஸ்வரன் உறுதி பூண்டுள்ளார்.அதற்கேற்ப தனது அரசியல் பணிகளையும் கட்டமைத்து செயலாற்றி வருகிறார்.

துன் சாமிவேலுவின் கடந்த கால பணிகளையும் சாதனைகளையும் நினைவு கூர்ந்து அவர் உடல்நலத்தோடு பல்லாண்டு வாழ அவருக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

https://selliyal.com/archives/226696