Mi-Voice MIC News

“கொவிட் – 19 தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடுவோம்” விக்னேஸ்வரனின் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர் : நாட்டின் 63-வது சுதந்திர தினத்தைக்  கொண்டாடும் மலேசிய வாழ் மக்கள் சுதந்திரத் தினத்தின் நோக்கத்தை அறிந்து – புரிந்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தமது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

“கடந்த மார்ச் மாதம் முதல் கொவிட்-19 தொற்று நோயின் காரணமாக அரசும் – மக்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். வர்த்தகம் முடங்கியது – வேலைகள் பறிபோயின – குடும்பங்கள் வருமானங்களை  இழந்தன – விலைவாசிகள் உயர்ந்தன – பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டன. இதனைத் தவிர்த்து மேலும் மக்களும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர். ஆனால், இதனையெல்லாம் முறியடிக்கும் வகையில், பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒரு விஷயமாகும். இது இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது” எனவும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் தெரிவித்தார்.

“என்றாலும். மீட்சிக் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக, இந்தியர்களையும் மஇகா மறக்கவில்லை. குறைந்த வருமானம் பெறுபவர்களை அடையாளங் கண்டு, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உதவித் திட்டத்தின் மூலம், கட்சிப் பொறுப்பாளர்களும்  தொண்டர்களும் அவர்களது வீட்டுக்குத் தேவையான அன்றாடப் பொருள்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் “பரிவுள்ள மஇகா” என்ற நோக்கத்தில் செயல்படும் கட்சியாக, மஇகா தன்னை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டுள்ளது” என்பதையும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும், கட்சியின் வளர்ச்சியிலும் மஇகா கவனம் செலுத்தும் வகையில், இவ்வாண்டு நடைபெற்ற அனைத்து கிளை மற்றும் தொகுதி ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, உறுப்பினர்களும் அதிகளவில் கூட்டங்களில் கலந்துக் கொண்டு, மஇகாவிற்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் விக்னேஸ்வரன் பெருமிதத்துடன் கூறினார்.

“நாம் சுதந்திரமாக சுவாசிக்க வேண்|டும் என்பதற்காக, கடந்த காலங்களில் வித்திட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவு கூர்ந்து, இந்த 63ஆவது மலேசிய சுதந்திர நாளை ஒருசில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://selliyal.com/archives/217673

About the author

Editor

Add Comment

Click here to post a comment