கோலாலும்பூர், ஜூன் 19: கடந்த 22 ஏப்ரல் 2016 முதல் நாடாளுமன்றத்தின் மேலவைத் தலைவராக பதவியேற்று சிறந்த முறையில் சேவையாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் பதவி தவணை காலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 22 திகதியுடன் நிறைவுப்பெறுகின்றது. நாட்டின் பேரரசர், பிரதமர் பொறுப்புகளுக்கு அடுத்த நிலையில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் மேலவைத் தலைவர் பதவியை அலங்கரித்து, தேசிய மற்றும் உலக ரீதிகளில் முத்திரைகள் பதித்து டான்ஸ்ரீ அவர்கள் விடைப்பெறுகிறார்.
கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினராகவும், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகவும் 2004 முதல் 2008 வரை பொறுப்பேற்றிருந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள், 2014-ஆம் ஆண்டு செனட்டராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2016-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவைத் தலைவராக அன்னார் நியமனம் பெற்றது ம.இ.கா கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட மாபெரும் அங்கீகாரமாகும்.
டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மூன்று பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாரிசான் நேஷனல், பாக்காத்தான் ஹாராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் என மூன்று வெவ்வேறு அரசாங்கங்களின் கீழும், டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், துன் டாக்டர் மகாதீர், டான்ஸ்ரீ முகிதின் யாசின் என மூன்று பிரதமர்களின் தலைமைத்துவத்திலும் பணியாற்றிய பெருமையை பெறுகின்றார். அரசாங்கம் மாறினாலும், வழங்கப்பட்ட கடமையினை செவ்வனே செய்து அனைவரின் அபிமானத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலவை அமர்வுகளில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எவ்வித பாகுப்பாடுமின்றி அனைத்து செனட்டர்களுக்கும் முறையான வாய்ப்புகளை டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வழங்கியுள்ளார். நாட்டின் சட்டத்திருத்தங்கள், தீர்மானங்கள் குறித்த விவாதங்களை நடுநிலையுடன் முன்னின்று நடத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலவையில் சீரமைப்புகள், சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
நாட்டின் ஆட்சி மையமான நாடாளுமன்றத்தில் இந்திய சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து, கலந்துரையாடி அவர்களுக்கு மாபெரும் அங்கீகாரத்தினையும் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வழங்கியுள்ளார். எண்ணிலடங்கா வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள், அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து மலேசியாவின் வெளியுறவு தொடர்புகளையும் மேன்மைப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், டான்ஸ்ரீ அவர்கள் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் நடைப்பெற்ற அனைத்துலக நாடாளுமன்ற தலைவர்களின் மாநாடுகளில் மலேசிய குழுவிற்கு தலைமைத் தாங்கியது மட்டுமின்றி, நாட்டின் கொள்கைகள், அனைத்துலக நல்லுறவுகள் குறித்து பேருரைகள் ஆற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் தமது ஆளுமைத்திறன், செயல்பாடுகள் வாயிலாக தாம் வகித்த மேலவைத் தலைவர் பதவிக்கு ஒரு புதிய அடையாளத்தினையும், அங்கீகாரத்தினையும் உருவாக்கியுள்ளார் என்றால் அது நிச்சயம் மிகையாகாது. ம.இ.கா தேசியத் தலைவராக சமுதாயத்தின் நலன், எதிர்காலம் கருதி அவர் செயல்படுத்திவரும் ஆக்ககரமான நடவடிக்கைகள் அனைவரின் அபிமானத்தை ஈர்த்துள்ளதும் வெள்ளிடைமலை. முன்னின்று எடுக்கும் காரியங்களில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வருகிறார் டான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.
நாடாளுமன்ற மேலவைத் தலைவராக முத்திரை பதித்து விடைப்பெறுகிறார் டான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்
Add Comment