Mi-Voice MIC News

மித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை? – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் மே 18-

இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ராவின் கீழ் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் கிட்டத்தட்ட ரிம 2 கோடியே 58 லட்சம் வெள்ளி பயன்படுத்தப்படாமல் இருந்தது என்பதை மலேசிய இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.. ஏ விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவது மிக அவசியம். இந்நிலையில் தற்போது மித்ரா கீழ் 2 கோடியே 58 லட்சம் வெள்ளி பயன்படுத்தப்படாமல் இருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை இன்று அவர் வெளியிட்டார்.

இதனிடையே மித்ராவை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க மலேசிய இந்திய காங்கிரஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை. ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கான திட்டமிடல் உட்பட பல நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான மானியத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மித்ரா நிதி குறித்துத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் முன்னாள் ஒற்றுமை அமைச்சர் பொன் வேதமூர்த்தி இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தொடர்ந்து கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், தேசிய மற்றும் மாநில ரீதியில் அரசு பொறுப்புக்களில் மஇகாவிற்குப் போதுமான பதவிகள் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு, பதவிகளுக்கு நாங்கள் குறி வைக்கவில்லை. மக்களின் சேவையை முன்னெடுப்பதற்குப் போதுமான பலத்தைக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தேசிய முன்னணி கூட்டமைப்பு என்பது வேறு! தேசிய கூட்டமைப்பு என்பது வேறு! தற்போது நடப்பு அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான தேவைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அமைச்சரவையில் ஒரு முழு அமைச்சர் இருக்கின்றார். அதோடு மாநில ரீதியிலும் உயர்மட்ட பதவிகளைக் கேட்டிருக்கின்றோம்.

ஆனால் அஃது எங்கள் நோக்கமல்ல. பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் மக்களுக்கான எங்களின் சேவை என்றும் தொடரும் என இன்று மஇகா தலைமையகத்தில் ‘உதவி’ எனும் அதிகாரத்துவ இணையப் பக்கத்தை அறிமுகம் செய்த பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.anegun.com/?p=39684