Mi-Voice MIC News

சொக்சோவின் தொழிலாளர் பணி நிலைநிறுத்தல் உதவி திட்டம் (ஈ.ஆர்.பி) தொடர்கின்றது, மனிதவள அமைச்சர் உறுதிப்படுத்தினார்

புத்ராஜெயா, மே 2 – கடந்த 16 மார்ச் 2020 அன்று அரசாங்கம் அறிவித்த சிறப்பு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் இடம்பெற்ற தொழிலாளர் சமூக பாதுகாப்பு நிதி வாரியத்தின் (சொக்சோ) தொழிலாளர் பணி நிலைநிறுத்தல் உதவி திட்டம் (ஈ.ஆர்.பி) தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது எனவும், முதலாளிமார்கள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் மனிதவள அமைச்சு இன்று உறுதிப்படுத்தியது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திட்டத்தின் விதிமுறைகளுக்குட்பட்ட மனுதாரர்களுக்கு உதவிநிதி வழங்கப்படும் என தமதறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த ஈ.ஆர்.பி திட்டத்தின் வாயிலாக கோவிட்-19 தாக்கத்தினால் சம்பளமற்ற விடுப்புக்கு உள்ளாகும் தொழிலாளர்கள், மாதம் ரிங்கிட் 600 என ஆறு மாதங்களுக்கு உதவிநிதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நேற்று (மே 1) வரை 230,652 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 27,222 விண்ணப்பங்கள் முதலாளிமார்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களுக்கு தத்தம் முதலாளிமார்கள் வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகின்றது.

மாத வருமானம் ரிங்கிட் 4000-க்கு குறைவாகப் பெற்று, சொக்சோவின் பணி காப்புறுதி திட்டத்தில் (எஸ்.ஐ.பி) சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்கள் இந்நிதியுதவியினைப் பெற தகுதி பெறுகின்றனர். அரசாங்கம் இத்திட்டத்திற்கு ரிங்கிட் 120 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

https://www.thesentral.my/2020/05/02/tamil-ksm-program-erp-diteruskan/