Mi-Voice MIC News

வேலையில்லா திண்டாட்டத்திற்கான தீர்வு, இந்திய சமுதாய நலன் பேணல் ஆகியவையே எமது நோக்கு – மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் உறுதி

புத்ராஜெயா, மார்ச் 10: நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கான தீர்வினை காணபதில் மனிதவள அமைச்சு முனைப்புடன் செயல்படும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ மு. சரவணன் இன்று தெரிவித்தார்.

புதிய மனிதவள அமைச்சராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் இளைஞர்களிடையே திகழும் சவால்மிக்க இப்பிரச்சினையைக் களைந்தாலே நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் களைய இயலும் என மேலும் கூறினார்.

“நாட்டின் தொழிற்துறைகளின் தேவைக்கேற்ப இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்கள் உருமாற்றம் காண வேண்டும். திறன் பெற்ற இளைஞர்களே தொழிற்துறைகளின் முன்னேற்றத்திற்கு தேவை. அதன் அடிப்படையில் அமைச்சின் திட்டங்கள் வடிவமைக்கப்படும்,” என்றார் சரவணன்.

இதனிடையே, தம்மை அமைச்சர் பதவிக்கு முன்மொழிந்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் நியமனம் செய்த பிரதமர் டான்ஸ்ரீ முகிடின் யாசின் இருவருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புதிய அமைச்சரவையின் ஒரே இந்திய அமைச்சரான சரவணன், கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என சமுதாயத்தின் அனைத்துத் தேவைகள் மற்றும் எதிர்காலத்தினைப் பேணுவதே தமது முன்னுரிமை என சூளுரைத்தார்.

https://www.thesentral.my/2020/03/10/tamil-dssaravanan-hrminister/